திருப்பூர் மாகாளியம்மன் கோவிலில் ஏன் தகராறு? அ.தி.மு.க-வினர் மீது கொதிக்கும் மக்கள்...! | Protest regarding temple function collapsed

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (02/03/2019)

கடைசி தொடர்பு:15:37 (02/03/2019)

திருப்பூர் மாகாளியம்மன் கோவிலில் ஏன் தகராறு? அ.தி.மு.க-வினர் மீது கொதிக்கும் மக்கள்...!

திருப்பூர் அருகே கோயில் திருவிழாவின்போது தகராறில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகர்களை கைது செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாகாளியம்மன் கோவிலில் ஏன் தகராறு? அ.தி.மு.க-வினர் மீது கொதிக்கும் மக்கள்...!

கோயில் திருவிழாவின்போது, தகராறில் ஈடுபட்ட திருப்பூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர்களைக் கைது செய்யக்கோரி பலமுறை கேட்டுக் கொண்டபோதிலும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பத்மாவதிபுரம் பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோயில் திருவிழா, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழா நிகழ்ச்சியில் ஒன்றாக, பிப்ரவரி 19-ம் தேதி `சலங்கையாட்டம்' என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் கருணாகரனின் மகன் சுரேஷ் மற்றும் அவரின் உறவினர்கள் சிலர் கூட்டத்தினருடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்தனர். ஆடிக்கொண்டிருந்தவர்களில் சிலரின் கை, கால்கள் சுரேஷ் மீது பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், சம்பந்தப்பட்டவர்களுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த கோயில் கமிட்டியினரும், பொதுமக்களும் இணைந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

திருப்பூர் அருகே திருவிழாவின் போது தகராறு

இந்தநிலையில் கடந்த 20-ம் தேதியன்று சுரேஷ், ரகு மற்றும் சிலர் திடீரெனக் கோயில் திருவிழாவுக்குள் புகுந்து, அங்கிருந்த அலங்கார விளக்குகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நின்ற தங்கராஜ் மற்றும் அவரின் உறவினரைத் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 இதைத் தொடர்ந்து, தகராறில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் சுரேஷ், ரகு, கருணாகரன், ராஜகோபால் உள்ளிட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பத்மாவதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். ஆனால், அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கும் காவல்துறை தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், பத்மாவதிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் இறங்கினர். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும்வரை, போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளதால், பரபரப்பு நிலவுகிறது. திருப்பூர் மாநகரின் முக்கியச் சாலையில் மறியல் நடைபெற்றதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

திருப்பூர் பிரமுகர் ஈஸ்வரன்இதுபற்றி நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், ``தகராறில் தாக்கப்பட்டவரும், தாக்குதலில் ஈடுபட்டவரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே. கருணாகரன் என்பவர் கூட்டுறவு சொசைட்டியில் தலைவராக இருக்கிறார். எனவேதான், எப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரும், அ.தி.மு.க-வின் அழுத்தம் காரணமாக, போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், அதிகார மட்டத்திலிருந்து அதைத் தடுக்கிறார்கள். தகராறு நடைபெற்றது அனைவருக்குமே தெரியும். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உட்பட பலருக்கும் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். 

இந்தப் பிரச்னை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அளித்த பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று மட்டும் சொல்கிறார்கள். சம்பவம் நடந்து 10 நாள்கள் கடந்த நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே சாலை மறியலில் இறங்கினோம்" என்றார். 

அ.தி.மு.க. பிரமுகர்கள் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்க திருப்பூர் மாநகரக் காவல் துணை கமிஷனர் உமாவைத் தொடர்புகொண்டோம். ``சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ், ரகு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.அவர்களைத் தேடி வருகிறோம். இதில் எந்தவிதமான அரசியல் அழுத்தமும் எங்களுக்கு இல்லை" என்று பதிலளித்தார்.

`ஆளுங்கட்சியினர் என்றால், போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்?' என்று திருப்பூர் மாநகர மக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close