"தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டி" - மது குடிப்போர் விழிப்புஉணர்வு சங்கம் காமெடி! | 'Do not think we are going to fall!' - Madhu kudippoar Sangam

வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (02/03/2019)

கடைசி தொடர்பு:12:23 (16/03/2019)

"தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டி" - மது குடிப்போர் விழிப்புஉணர்வு சங்கம் காமெடி!

``மிழகத்தில் மதுப் பிரியர்கள்தான் மெஜாரிட்டி... மதுவிலக்குப் பற்றிப் பேசிய கட்சிகள் எல்லாம், சாராய ஆலை வைத்திருப்பவர்களுடன் கூட்டணி சேர்கிறார்கள். எங்களுக்கும் எம்.பி. சீட்டுக் கொடுக்க வேண்டும்’’ என்று நையாண்டியாகக் கொந்தளிக்கிறார்கள் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர்.

பரபரப்பான அரசியல் சூழலில், கட்சித் தலைவர்களின் பேட்டிகளை சினிமா டயலாக்குகளால் விமர்சனம் செய்து ட்ரெண்ட்டாக்கி விடுகிறார்கள், `மீம்’ க்ரியேட்டர்கள். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்லவும், மற்ற கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கவும், மீம் க்ரியேட்டர் `டீம்’ வைத்திருக்கிறார்கள். மீம்ஸ்களுக்கு, கமென்ட் போடுவதற்கென்றே ஒரு பெருங்கூட்டம் எப்போதும், காத்திருக்கிறது. மீம் க்ரியேட்டர்களுக்கு வேலை வைக்காமல் சில லெட்டர் பேட் கட்சிகள் மற்றும் குட்டிக்குட்டி சங்கங்கள் செய்யும் வேலை, தானாகவே ட்ரெண்டாகி விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வாக, `தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்’ செய்திருக்கும் வேலை, மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியில் சேரும் எந்தக் கட்சிக்கும், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஆதரவு தராது. 61.4 சதவிகிதம் உள்ள டாஸ்மாக் பிரியர்கள் குடும்பங்களின் நலனைக் காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேருவோம். இல்லையென்றால் தனித்தே தேர்தலைச் சந்திப்போம்’’ என்று கூறியுள்ளார். இதற்கு, சமூக வலைதளங்களில் கலாய்க்கும்விதமாக கமென்ட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில, ``உங்கள் ஓட்டு சுடுகாடு சின்னத்திற்கே..., ஐயா யாரும் எங்களைக் கேவலமாகப் பேசவேண்டாம். மொத்தக் கட்சியும் எங்களை நம்பித்தான் உள்ளன. இதெல்லாம் ஒரு பொழப்பு’’ என்று கமென்ட்ஸ்-களில் வலைதள கில்லாடிகள் கதறவிடுகின்றனர்.

மாநில தலைவர் செல்லப்பாண்டியன்- மது குடிப்போர் சங்கம்

இதுபற்றி, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனிடம் கேட்டதற்கு, ``தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளுமே மதுவிலக்கை வலியுறுத்தியவைதான். ஆட்சிக்கு வந்தால் முதல் கையொப்பம் பூரண மதுவிலக்கு என்று கூறிவந்த பா.ம.க, இன்று அ.தி.மு.க-வுடன் கைகோத்திருக்கிறது. மதுவிலக்குக்காகப் போராடிய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தி.மு.க கூட்டணியில் உள்ளன. சில்லரை விற்பனைக்கு முன்புவரை, மதுப் பிரியர்கள் ஒன்றரை சதவீதம், இரண்டு சதவீதம்தான் இருந்தோம். அப்போது, எங்களுக்கு அரசியல் கட்சிகள் குவார்ட்டர், பிரியாணி வாங்கிக் கொடுத்தனர். நாங்கள் அவர்களுக்காகக் கோஷம் போட்டோம். இப்போது, எந்தவொரு அரசியல் கட்சியின் வாக்கு வங்கியும், எங்கள் மதுப் பிரியர்களின் சதவீதத்துக்கு நிகராக இல்லை.

`சரக்கு வாங்கிக் கொடுத்தால், அதை வாங்கிக் குடித்துவிட்டு வீழ்ந்துவிடுவோம்' என்று அரசியல் கட்சிகள் நினைக்கவேண்டாம். காலம் மாறிவிட்டது. நாங்கள் அரசியல் பார்வைக்குத் திரும்பி விட்டோம். தமிழக அரசுக்கு வருமானத்தை வாரி வாரிக் கொடுக்கிறோம். டாஸ்மாக் வருமானத்தில்தான், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருகிறோம் என்று வணிகவரி அமைச்சரே பேசியிருக்கிறார். எங்களை மதித்து, தி.மு.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேராத கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியன எங்களைச் சேர்த்துக்கொண்டு, எம்.பி. சீட் கொடுக்கவேண்டும். அவர்களும் புறக்கணித்தால், நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம்’’ என்றார்

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close