`சூப்பராக இருக்கீங்க; அழகாக இருக்கீங்க' - சிறுமியால் சிரித்த டி.டி.வி.தினகரன் - வீடியோ | 'Beautiful' Conversation Between TTV Dhinakaran with Girl Child

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (02/03/2019)

கடைசி தொடர்பு:16:26 (02/03/2019)

`சூப்பராக இருக்கீங்க; அழகாக இருக்கீங்க' - சிறுமியால் சிரித்த டி.டி.வி.தினகரன் - வீடியோ

தினகரன்

தேர்தல்  பிரசாரத்துக்குச் சென்ற தினகரன், காரில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த சிறுமி,  `நீங்கள் அழகாக இருக்கீங்க, சீக்கிரம் சி.எம். ஆகுங்க' என தைரியமாகக் கூறினார். சிறுமியும் தினகரனும் பேசும் வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஓர் அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் அமைந்துள்ளன. அ.தி.மு.க.விலிருந்து பிரிந்த டி.டி.வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுவருகிறார். டி.டி.வி. தினகரன் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தன்னந்தனியாக தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்துவந்தார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, அ.ம.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இதனால் டி.டி.வி.தினகரன் தலைமையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது.  

 தினகரன்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகளும் என முடிவாகியுள்ளது. தே.மு.தி.க-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

 தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரத்துக்காக காரில் சென்றபோது அவரை சிறுமி ஒருவர் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால், காரில் அமர்ந்திருந்த அவரை அந்தச் சிறுமியால் பார்க்க முடியவில்லை. இதனால் சிறுமியை தூக்கி காண்பித்தபோது அவருக்கு  கைகுலுக்கினார் தினகரன்.  அப்போது அந்தச் சிறுமி அவரைப் பார்த்து `நீங்கள் சூப்பரா இருக்கீங்க, அழகாகவும் இருக்கீங்க' என்று கூறுகிறார். அதற்கு அவர் `நான் அழகாகவா இருக்கிறேன்' என்று சிறுமியிடம் கேட்க, ஆமாம் என்று தலையை அசைத்த அவர், சீக்கிரம் `சி.எம். ஆகுங்க' என்று தைரியமாகக் கூறினார். 

டி.டி.வி தினகரனுடன் பேசும் அந்தச் சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கடலூர்  பிரசார கூட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக அ.ம.மு.க நிர்வாகிகள் கூறினர். சிறுமியைத் தொடர்ந்து காரின் அருகில் இருந்த சிறுவர், சிறுமிகளும் அழகாக இருக்கீங்க என கோஷமிட்டனர்.அதைக் கேட்ட தினகரன் சிரித்தபடியே கை அசைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். டி.டி.வி. தினகரனைப் பார்த்து அந்தச் சிறுமி மட்டும் மூன்று தடவை அழகாக இருக்கீங்க என்று சொல்வது அந்த வீடியோவில் இடம்பிடித்துள்ளது. 


[X] Close

[X] Close