`அப்பாவை கவனித்துக்கொள்ளுங்கள்!’ - நம்பிச் சென்ற மகன்; துரோகம் செய்த நர்ஸ்  | nurse stolen jewels in chennai virugampakkam

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (02/03/2019)

கடைசி தொடர்பு:17:18 (02/03/2019)

`அப்பாவை கவனித்துக்கொள்ளுங்கள்!’ - நம்பிச் சென்ற மகன்; துரோகம் செய்த நர்ஸ் 

நர்ஸ்

சென்னை விருகம்பாக்கத்தில் வயதான அப்பாவைக் கவனித்துக்கொள்ள நர்ஸ் ஒருவரை ஏற்பாடு செய்த மகனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரின் அப்பாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அருகிலிருந்து அவரைக் கவனிக்க வேண்டும். மேலும் தினமும் மருந்து மாத்திரைகளை நேரத்துக்கு அவருக்குக் கொடுக்க வேண்டும். இந்தநிலையில், வேலை காரணமாக சிவக்குமார் வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் வயதான அப்பாவைக் கவனித்துக்கொள்ள நர்ஸ் ரேவதி என்பவரை ஏற்பாடு செய்துள்ளார் சிவக்குமார். வெளியூர் செல்வதற்கு முன் ரேவதியிடம், நான் வரும் வரை அப்பாவை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். அதற்கு ரேவதியும் `நீங்கள் கவலைப்படாமல் சென்று வாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார். அதை நம்பிதான் சிவக்குமார் வெளியூர் சென்றுள்ளார். 

வீடு திரும்பிய சிவக்குமாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் அப்பாவைக் கவனித்த நர்ஸ் ரேவதி மாயமாகியிருந்தார். வயதான அப்பாவிடம் கேட்டபோது, `அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை’ என்று கூறினார். இதையடுத்து பீரோவில் உள்ள நகை, பணத்தை சிவக்குமார் பார்த்தார். அப்போது, 10 சவரன் நகை, 40,000 ரூபாய் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதையடுத்து சிவக்குமார், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டுக்குள் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

இதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை நர்ஸ் ரேவதி மீது விழுந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்று விசாரித்தபோது ரேவதி தலைமறைவாக இருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர தேடுதலுக்குப் பிறகு ரேவதி பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் ரேவதியிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்தார். போலீஸாரின் விசாரணையில் நகை, பணத்தைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். நகை, பணம் குறித்து ரேவதியிடம் விசாரணை நடந்துவருகிறது. பணத்தையும் நகையையும் மீட்க ரேவதியை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு, நம்பிக்கை துரோகம் செய்த ரேவதி மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

நர்ஸை நம்பி அப்பாவையும் வீட்டையும் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியருக்கு அதிர்ச்சியைக் கொடுத்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close