4 கேட்டாங்க; கொடுத்தது ஒண்ணு!-  தினகரனுடன் கூட்டணி சேர்ந்த முதல்கட்சி  | SDPI party alliance with ttv's amma makkal munnetra kazhagam

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (02/03/2019)

கடைசி தொடர்பு:10:37 (16/03/2019)

4 கேட்டாங்க; கொடுத்தது ஒண்ணு!-  தினகரனுடன் கூட்டணி சேர்ந்த முதல்கட்சி 

தினகரன் கட்சி கூட்டணி

 டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் முதல் தடவையாக ஒரு கட்சி கூட்டணி அமைத்துள்ளது. 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான நடவடிக்கைகளை இறுதி செய்யும் அதிகாரத்தை மாநில பொதுக்குழு, மாநில செயற்குழுவுக்கு அளித்தது. மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் நாடு முழுவதும் பாசிச சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. மாநில நலனில் தலையிடும் வகையில் மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடு அமைந்திருந்தும், மாநில அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் மோசமான அவலநிலையில்தான் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு, தமிழக நலனை சீர்குலைக்கும்  நடவடிக்கை அதிகரித்துள்ளன. தமிழக நலன் சார்ந்த கட்சித் தலைமை தேவை ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம். 

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியை விமர்சித்துவரும் அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் கைக்கோக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்துள்ளோம். ஒரு தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுவது, கூட்டணியின் வெற்றிக்கு இணைந்து பணியாற்றுவது என முடிவெடுத்துள்ளோம்.

 

தமிழக நலனை புறக்கணித்து தங்கள் சொந்த நலனுக்காக மதவாத, மக்கள் விரோத கட்சிகளிடம் மண்டியிடும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது,  மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. அப்துல் கரீம் ஆகியோர் உடனிருந்தனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``மத்திய சென்னை, வேலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளை அ.ம.மு.க.விடம் கேட்டோம். அதில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். எஸ்.டி.பி.ஐ. எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்" என்றார். 


[X] Close

[X] Close