கஜா புயலுக்குப் பின் பறவைகள் வரத்து குறைந்துள்ளதா? - வடுவூர் கணக்கெடுப்பில் தகவல் | Is really Gaja cyclone affect incoming birds of vaduvoor Sanctuary?

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (02/03/2019)

கடைசி தொடர்பு:20:20 (02/03/2019)

கஜா புயலுக்குப் பின் பறவைகள் வரத்து குறைந்துள்ளதா? - வடுவூர் கணக்கெடுப்பில் தகவல்

ஜா. ஒரு பெரும் துயரம். மனிதர்களையும் கால்நடைகளையும் சூறையாடிய கஜா பறவைகளையும் விட்டு வைக்கவில்லை. திருவாரூரில் வடுவூர், உதயமார்த்தாண்டம், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் ஈரம் நிறைந்த பகுதியாக இருப்பதால் பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் கஜா புயலுக்குப் பின்பு பறவைகளின் வரத்து குறைந்துள்ளதா என அண்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வனத்துறையின் சார்பாக தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், பறவையியல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு இக்கணக்கெடுப்பை நடத்தினர். அதன்படி வடுவூரில் 23,687 பறவைகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடத்திய ஆய்வின் படி 29,284 பறவைகள் இருந்துள்ளன. இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள திருச்சியைச் சேர்ந்த  பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் குமரகுருவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ``அண்மையில் ஒருங்கிணைந்த  தமிழ்நாடு பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 134 பறவையினங்களும் 48,510 பறவைகளும் இருந்தன.

பறவைகள்

இதில் நிலப்பறவை, நீர்ப்பறவை, வலசைப்பறவை என வகைப்படுத்தப்பட்டன. 61 வகையினங்களில் 1996 நிலப்பறவைகளும், 53 வகையினங்களில் 46,514 நீர் மற்றும் வலசை பறவைகள் வருகை தந்துள்ளன. இங்கு நிலவும் ஈரப்புல நிலங்கள் பறவைகளுக்கும் விவசாயிகளுக்கும் பெரிதும் பயன்படுகிறது. முத்துப்பேட்டை பகுதியில் காணப்படும் சதுப்பு நிலங்களும் பறவைகளுக்கு ஏற்ற இடமாக காணப்படுகிறது. மிகக் குறைவாக வந்துள்ள பறவைகளான Bar headed goose (பட்டை  தலை வாத்து), Pelican (கூழைக்கடா), Spot billed duck (புள்ளி மூக்கு வாத்து), Ruff (பேதை உள்ளான்), cotton teal (குள்ளத்தாரா), Pin tail duck (ஊசி வால் வாத்து), Common pochard (கழியன்), White eye ibis (வெள்ளை அறிவால் மூக்கன்), Black eye ibis (கறுப்பு அறிவால் மூக்கன்), ஜொலிக்கும் அரிவாள் மூக்கன்), Night heron (வக்கா, இறா கொக்கு), Little cormorant (சிறிய நீர்காகம்), Larger cormorant (பெரிய நீர்காகம்), Darter(பாம்பு தாரா), Greay heron (சாம்பல் நாரை), Purple heron (மயிலாங்கால் கோழி), Open bill stork (நத்தை குத்தி நாரை), Painted storke (செங்கால் நாரை) போன்றவைகளாகும்.

கஜா புயலுக்குப் பின் வலசைப்பறவைகளின் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. இதில் செங்கால் நாரை, கூழைக்கடா, கிளி மூக்கு நாரை போன்ற வலசப் பறவைகள் இங்கு காணப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக இருந்தது. சென்ற வருடம் செங்கால் நாரை அதிகமான கூடுகள் கட்டி குஞ்சுகள் பொறித்துள்ளன. ஆனால், இந்த வருடம் கூடுகள் போன்ற தங்களுக்கான இடம் இல்லாததால் வருகை தரவில்லை என்பது கணக்கெடுப்பில் இருந்து தெரியவருகிறது. 

பறவைகள்

மரங்களின் கிளைகளே அவைகளின் இடமாகும். ஆனால், அவைகள் எல்லாம் கஜா புயலில் வீழ்ந்துவிட்டன. மேலும், பட்டைத் தலை வாத்து மங்கோலியா, சைபீரியா, இமயமலை போன்ற இடங்களை எல்லாம் கடந்து வடூவூர் பறவைகள் சரணாலயத்துக்கு வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பும், அதற்கு பின்பும் போன வருடம்தான் இந்தப் பறவையை பதிவு செய்தோம். இந்த வருடமும் நல்ல எண்ணிக்கையில்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பறவைகளின் வரத்து குறைவாக உள்ளது. வடூவூர் சரணாலயத்தில் மரங்கள் மற்றும் பறவைகளின் வாழ்விடங்கள் சரி செய்து வருகின்றனர். கூடிய விரைவில் வலசை பறவைகளின் வரத்து அதிகமாக இருக்கும் என நம்மிடம் பகிர்ந்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close