`இத தான் நாங்க பயன்படுத்துகிறோம்' - திண்டுக்கல் சீனிவாசனை கலங்க வைத்த பெண்மணி! | Dindigul Seenivasan drinks salt water

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (02/03/2019)

கடைசி தொடர்பு:23:30 (02/03/2019)

`இத தான் நாங்க பயன்படுத்துகிறோம்' - திண்டுக்கல் சீனிவாசனை கலங்க வைத்த பெண்மணி!

திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்கு, கொட்டப்பட்டி வழியாக புதிய பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இதற்கான விழா கொட்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு கொடியசைத்து பேருந்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய், திண்டுக்கல் அரசு கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன்

துவக்க விழா முடிந்தவுடன் கிராம மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். ``எங்கள் கிராமத்துக்கு குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுக்கிறார்கள். தற்போது தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆகிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை ஊராட்சி நிர்வாகம் தண்ணீரைக் கொடுக்கிறது. அந்தத் தண்ணீர் வாயில் கூட வைக்க முடியாது. உப்பாக இருக்கிறது. எனவே, தற்போது ஒரு குடம் 15 ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மிகவும் உப்புத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியவில்லை. கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாகக் கொடுக்கும் தண்ணீராவது முறையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கேட்டார்கள். மனுவையும் கொடுத்தார்கள். மனுவை வாங்கிய அமைச்சர் அதைக் கவனமாகப் படித்துப் பார்த்தார். 

திண்டுக்கல் சீனிவாசன்

அப்போது ஒரு பெண்மணி, ``எங்கள் ஊர் தண்ணீரைக் குடிக்கவே முடியாது குடித்துப் பாருங்கள். இந்த தண்ணீரை தான் நாங்கள் தினந்தோறும் பயன்படுத்துகிறோம்'' எனக் கொடுத்தார். அதை வாங்கி கொஞ்சம் குடித்தார் அமைச்சர். ஆனால் அதிக உப்பு காரணமாக குடித்த தண்ணீரைத் துப்பி விட்டார்.

திண்டுக்கல் சீனிவாசன் 

இதைச் சிலர் புகைப்படம் எடுத்ததைப் பார்த்ததும் டென்ஷனான அமைச்சர், ``இதையெல்லாம் போய் படம் எடுக்கலாமா'' எனச் சத்தம் போட்டுவிட்டு ``உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன்" எனச் சொல்லிவிட்டு இடத்தை விட்டுக் கிளம்பி விட்டார். ``ஒரு சொட்டு தண்ணியைக் கூட அமைச்சரால் குடிக்க முடியல.. ஆனா இதைத்தான் நாங்க தினமும் குடிக்கிறோம்" எனச் சிலர் வேதனையில் குமுறினார்கள். அமைச்சரிடம் இப்படி நடந்துக்கலாமா? என உள்ளூர் நிர்வாகிகள் கிராம மக்களிடம் எரிச்சலைக் காட்டினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close