‘இப்படி பேசாதீங்க ஹெச்.ராஜா..!’- கொந்தளிக்கும் அமைச்சர் நிலோஃபர் கபில்  | Don't speak like this H.Raja - ADMK Minister against the BJP

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (03/03/2019)

கடைசி தொடர்பு:08:40 (03/03/2019)

‘இப்படி பேசாதீங்க ஹெச்.ராஜா..!’- கொந்தளிக்கும் அமைச்சர் நிலோஃபர் கபில் 

‘‘விதண்டாவாதமாகப் பேசும் ஹெச்.ராஜா, இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று அ.தி.மு.க அமைச்சர் நிலோஃபர் கபில் அறிவுறுத்தியிருக்கிறார். இதன்மூலம், பி.ஜே.பி கூட்டணியைப் பெண் அமைச்சர் விரும்பவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

நிலோஃபர் கபில்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜல்தி ஊராட்சியில், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘‘வாட்ஸ்ஆப்பில் ஹெச்.ராஜா பேசும் ஒரு செய்தியை பார்த்தேன். அவர், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களைத் தவறாக சித்திரித்துப் பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்று ஹெச்.ராஜாவுக்குத் தெரியுமா? 

சமீபத்தில், இந்து சகோதரரான ராதாகிருஷ்ணன் என்பவர், லாரி விபத்தில் மரணமடைந்தார். அந்த சகோதரருக்கு ஆதரவாக, இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்றாகச் செயல்பட்டனர். போலீஸாரை எதிர்த்து போராட்டம் செய்தனர். இது தீவிரவாதமா? ஹெச்.ராஜா பேசுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. தீவிரவாதம் என்னவென்று ஹெச்.ராஜா புரிந்துகொள்ள வேண்டும். இனி இப்படிப் பேசாதீர்கள்’’ என்று அறிவுறுத்தினார். பெண் அமைச்சரின் இந்த பேச்சு, பா.ஜ.க கூட்டணி மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக  அமைந்திருப்பதால், அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.


[X] Close

[X] Close