7,195 கலைஞர்கள் - சிதம்பரத்தில் கின்னஸ் சாதனைப் பரத நாட்டிய நிகழ்ச்சி! | bharathanatiyam creates a Guinness Record in Chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (03/03/2019)

கடைசி தொடர்பு:15:55 (03/03/2019)

7,195 கலைஞர்கள் - சிதம்பரத்தில் கின்னஸ் சாதனைப் பரத நாட்டிய நிகழ்ச்சி!

சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சி. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனைக்காக 7000 பேர் கலந்து கொண்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நேற்று 7,195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்ட நாட்டிய  நிகழ்ச்சி 15 நிமிடம் நடைபெற்றது. விழாவை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் தலைமையில் பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினார்கள். நிகழ்ச்சியில் 5 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு நாட்டியமாடியது அனைவரையும் கவர்ந்தது.

ஆயிரக்கணக்கான நாட்டியக் கலைஞர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே சீருடையில் ஒரே பாடலுக்கு ஒரே அசைவுகளைக் கொண்டு நடனம் ஆடியதால் காண்போருக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து லண்டனில் இருந்து வருகைதந்த கின்னஸ் சாதனை ஒருங்கிணைப்பாளர் ரிஷிநாத் கூறுகையில், ``இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 4,525 நடன கலைஞர்கள்  கலந்து கொண்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தினார்கள். தற்போது நடந்த நிகழ்ச்சியால் அது முறியடிக்கப்பட்டது" என்றார்.

நிகழ்ச்சி காலை 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் நேற்று இரவே சிதம்பரத்தில் வந்து தங்கி அதிகாலை 4 மணிக்கு எழுந்து மேக்கப் போட்டு ஆறு மணிக்கு கோயிலுக்கு வந்தனர். ஆனால் சிறப்பு விருந்தினர் பத்மா சுப்பரமணியம் எட்டரை மணிக்கு வந்ததால் நாட்டியம் ஆட வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்து சோர்ந்து போனார்கள். பின்னர்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரைத் துரிதப்படுத்தி வரவழைத்து நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.


[X] Close

[X] Close