கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கக் கோரி வனத்துறையினர் விழிப்புணர்வுப் பயணம்! | Forest department organised awareness rally in World Wildlife Day at dhanushkodi

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:54 (04/03/2019)

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கக் கோரி வனத்துறையினர் விழிப்புணர்வுப் பயணம்!

உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு மண்டபம் வன உயிரின வனச் சரக அலுவலர்கள் தனுஷ்கோடிக்கு இரு சக்கர விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

உலக வன உயிரின தினம் பிரசாரம்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், மார்ச் 3-ம் தேதியை சர்வதேச வன உயிரின நாளாகக் கொண்டாடுகின்றன. வன விலங்குகள், வனத்தில் உள்ள முக்கிய தாவரங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப் பொருளை மையமாக வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக வன உயிரின நாளில், `கடல் வாழ் உயிரினங்கள் மக்களுக்காகவும், பூமிக்காகவும்’ என்ற மையக் கருத்தை மக்களிடையே பரப்ப வனத்துறை முடிவு செய்துள்ளது.

இதையொட்டி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் ஆமை, திமிங்கிலம், சுறா, கடல் குதிரை, கடல் அட்டை, பவளப்பாறை மற்றும் கடல் தாவரங்கள் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்தும், அழிவிலிருந்து அவற்றைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டபம் வன உயிரின வனச்சரகர் சதீஷ் தலைமையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளப்பட்டது. 

மண்டபம் வன உயிரின வனச்சரக அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வரை சுமார்  45 கி.மீ தூரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தின்போது மீனவர்கள், கிராம மக்கள், தனுஷ்கோடிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களுக்குக் கடல் வாழ் உயிரினங்களின் பயன்பாடு மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வுக் கையேடுகள் வழங்கப்பட்டன.


[X] Close

[X] Close