வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (21/05/2013)

கடைசி தொடர்பு:14:32 (21/05/2013)

ஆனைமலை காப்பகத்தில், புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 5 நாள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பானது இன்று துவங்கியுள்ளது. 958 சதுர கீ.மீ. வனப்பகுதியில் 71 குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பானது இன்று துவங்கியுள்ளது. 958 சதுர கீ.மீ. பரப்பளவு கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகம், 6 வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உடுமலை, வால்பாறை, அமராவதி, மானம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய 6 வனசரகங்களில் இந்த கணக்கெடுப்பானது நடத்தப்படுகிறது.

இந்த வனப்பகுதி 71 நேர்கோட்டு பாதைகளாக பிரிக்கப்பட்டு, புலிகள் கணெக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் 71 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குழுவிற்கு மூன்று பேர் வீதம் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்த புலிகளின் காலடி தடம், எச்சம் ஆகியவற்றை கொண்டு எடுக்கப்படும் கணக்கெடுப்பு துல்லியமானதாக இல்லை என வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்ததை தொடர்ந்து, தற்போது புதிய முறையில் கணெக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

''புதிய கணெக்கெடுப்பு முறையில் முதல்கட்டமாக நேர்கோட்டு பாதையிலும், வனப்பகுதியில் நடந்தும் கணக்கடுப்பு நடத்தப்படும் என்றும், அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, கேமராக்கள் மூலம் புலிகளை பதிவு செய்து அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் துல்லியமாக புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க முடியும்'' எனவும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ''கடந்த முறை நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஓருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பின் போது 1,706 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பழைய முறையை தவிர்த்து தற்போது புதிய முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் விரைவில் நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுக்க முடியும்'' என்றும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று துவங்கிய முதல்கட்ட கணக்கெடுப்பு பணி வரும் 25ஆம் தேதி வரை 5 நாட்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெறுகிறது.

ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்