`ராமதாஸ் பற்றிப் பேச வைகோவுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ - தேனி கூட்டத்தில் ஓ.பி.எஸ் மகன் காட்டம் | OPS son slams all opposition parties

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (04/03/2019)

கடைசி தொடர்பு:10:54 (16/03/2019)

`ராமதாஸ் பற்றிப் பேச வைகோவுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ - தேனி கூட்டத்தில் ஓ.பி.எஸ் மகன் காட்டம்

ஜெயலலிதாவின் 71 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 1 லட்சத்து 71 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் நடைபெற்றது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், தேனி எம்.பி பார்த்திபன், மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேனி  கூட்டம்

அப்போது பேசிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார், ``தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா. தேனி பகுதியில் எவ்வளவோ பிரச்னைகள் வந்தது. முல்லைப்பெரியாறு பிரச்னை உட்பட அனைத்துப் பிரச்னைகளும் வந்தபோது தினகரன் எங்கே போனார்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தினகரன் ஒரு வார்த்தை பேசியிருப்பாரா?

ஏனென்றால், ஜெயலலிதா மீது அவ்வளவு பயம். ஜெயலலிதா சிறைச்சாலைக்கு சென்றதுக்கு காரணம் தினகரன்தான். அனைவரையும் மாட்டிவிட்டுவிட்டு, தான் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். பா.ம.க.வுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுத்து சின்னம் வாங்கிக்கொடுத்தவர் ஜெயலலிதா. சோனியா காந்தியிடம் கைகோத்து இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர் கருணாநிதி என்று பேசியவர் வைகோ. இன்று அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ராமதாஸ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

அ.தி.மு.க கூட்டம்

அப்துல்கலாமுக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்தது பா.ஜ.க தான். மீண்டும் அவரைக் குடியரசுத்தலைவராக ஆக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டவர் கருணாநிதி. ஆனால், சிறுபான்மையினருக்கு இவர்கள்  நன்மை செய்வதாக கூறிக்கொள்கிறார்கள். விஜயகாந்த் எங்களுடன் இணைந்துவிடுவார், தனக்கு டெப்பாசிட் காலியாகிவிடும் என்று அவர் வீட்டுக்கு ஓடினார் ஸ்டாலின். இதே விஜயகாந்தை, வடிவேலுவை வைத்துக் கிண்டல் செய்து மேடையில் பேச வைத்தது தி.மு.க தான்.!” என்று வைகோ, ஸ்டாலின், டி.டி.வி தினகரன் ஆகியோரை மேடையில் கடுமையாகத் தாக்கிப் பேசினார் ரவீந்தரநாத்குமார்.


[X] Close

[X] Close