``கலைஞரின் தளபதி ஸ்டாலின்; ஸ்டாலினின் தளபதி உதயநிதி!" - கரூரில் செந்தில்பாலாஜி பேச்சு | Senthilbalaji speech in karur district

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (04/03/2019)

கடைசி தொடர்பு:12:00 (04/03/2019)

``கலைஞரின் தளபதி ஸ்டாலின்; ஸ்டாலினின் தளபதி உதயநிதி!" - கரூரில் செந்தில்பாலாஜி பேச்சு

 தி.மு.க பொதுக்கூட்டம்

``மத்தியை ஆளும் மோடி அரசையும், எடப்பாடி அரசையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைதேர்தலிலும் டெபாசிட் இழக்க வைப்போம்!" என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.


 போட்டியை தொடங்கி வைக்கும் உதயநிதி ஸ்டாலின்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி இந்த விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடினார். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். மாட்டு வண்டிப் பந்தயம், கிரிக்கெட், குதிரை வண்டிப் பந்தயம், வாலிபால், மாரத்தான், பிரமாண்ட ரத்ததான முகாம், 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் என்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பள்ளி மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சுமார் 20,000 பேர்களுக்கு மேல் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் உதயநிதி ஸ்டாலினை அடுத்த வாரிசு என்று அழைத்தனர். அதோடு, 'அரவக்குறிச்சி சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர் செந்தில்பாலாஜிதான்' என்றும் முழங்கினர்.


 நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய செந்தில்பாலாஜி, ``கலைஞரின் தளபதி ஸ்டாலின், ஸ்டாலினின் தளபதி உதயநிதி. இப்போதைய தமிழக இளைஞர்களின் எழுச்சி நாயகனாக உதயநிதி இருக்கிறார். அவரை வைத்து, விளையாட்டுப் போட்டிகள், பொதுக்கூட்டத்தை நகராட்சி மைதானத்தில் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், இங்கு அதிகார போதையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் (எம்.ஆர்.விஜயபாஸ்கர்) அதிகாரிகளை உசுப்பிவிட்டு, அனுமதி தர மறுத்துவிட்டார். காரணம், உதயநிதிக்கு கூடும் லட்சக்கணக்கான இளைஞர்களைப் பார்த்து, பயந்துதான் அனுமதி தராமல் தடுத்துவிட்டார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அவரது கொட்டத்தை அடக்குவோம். தமிழகம் மற்றும் கரூர் மாவட்டம் முழுவதும் திரளும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூட்டமே, அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பதை பறைசாற்றுகிறது. இவ்வளவு கூட்டம் இங்கே கூட காரணமாக இருந்த அத்தனை ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சிக்கழகத்துக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பில் நன்றி.

உதயநிதி ஸ்டாலின்

இங்கே கூடியிருக்கும் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினரிடம் சொல்லி, வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வைத்து, தி.மு.கவை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இப்படி முயன்றால், மோடி ஆட்சியை மட்டுமல்ல, கல்லாப்பெட்டி எடப்பாடி ஆட்சியையும் டெபாசிட் இழக்க வைக்கலாம். அரவக்குறிச்சித் தொகுதி இடைத்தேர்தலில் தலைவர் யாரை நிறுத்துகிறாரோ, அவரை அமோக வெற்றி பெற வைப்போம்!" என்றார்.


[X] Close

[X] Close