`தடைகளைத் தாண்டித்தான் 2 சீட் கிடைத்தது!’ - தி.மு.க - வி.சி.க பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? | Reason behind dmk allocated seats to vck

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (04/03/2019)

கடைசி தொடர்பு:10:59 (16/03/2019)

`தடைகளைத் தாண்டித்தான் 2 சீட் கிடைத்தது!’ - தி.மு.க - வி.சி.க பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

சிதம்பரம் தொகுதியை மட்டுமே ஒதுக்கீடு செய்யும் முடிவில் ஸ்டாலின் இருந்தார். திருமாவளவன் காட்டிய உறுதியால்தான் கூடுதலாக ஒரு தொகுதியைப் பெற முடிந்தது.

`தடைகளைத் தாண்டித்தான் 2 சீட் கிடைத்தது!’ - தி.மு.க - வி.சி.க பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. `ஒரு சீட்டைக் கொடுத்தாலும் பொறுத்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் திருமாவின் நிலைப்பாடாக இருந்தது. 2 தொகுதிகளை ஒதுக்கியிருப்பதன் மூலம் சிறுத்தைகளின் கோபம் தணிந்திருக்கிறது’ என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள். 

திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று வந்திருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். தி.மு.க தரப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் வந்திருந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் வி.சி.க-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `சிதம்பரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதாவது 2 தொகுதிகள் வி.சி.க-வுக்குக் கிடைக்கும்’ என அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம். ``தி.மு.க அணியில் 2 இடங்களைப் பெறுவதற்கு ஏராளமான தடைகளைத் தாண்ட வேண்டியதாக இருந்தது. நேற்று கட்சியைத் தொடங்கிவிட்டு, இன்று அறிவாலயம் வந்தவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுத்தனர். தமிழகம் முழுவதும் எங்களுக்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருக்கிறார்கள். கருணாநிதி இருந்தவரையில், தனித்துப் போட்டியிட்டு அவருக்கு சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என அமைதியாக இருந்தார் திருமா. இதனால் மாநிலம் முழுவதும் எங்கள் வலிமையைக் காட்ட முடியாத சூழல் இருந்தது. இதையே தி.மு.க-வில் உள்ள வெகுசிலர் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டனர். நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தைக்குத் திருமாவளவன் வருவார்’ எனத் தொண்டர்கள் காத்திருந்தார்கள். 

துரைமுருகன், டி.ஆர்.பாலு

ஆனால், தொகுதிப் பங்கீட்டில் உரிய தீர்வு எட்டப்படாததால் அவர் செல்லவில்லை. இதைப் பற்றிக் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, `தலித் கட்சிகளை உதாசீனப்படுத்துவதில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றனர். நம்முடைய பலம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை. மக்களவைத் தேர்தலுக்காக தி.மு.க-வுடன் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது, `5 சீட்டுகளை எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்தோம். இதைக் கேட்டு துரைமுருகன் உள்ளிட்டவர்கள் சிரித்துவிட்டார்கள். பிறகு, படிப்படியாக 3 சீட் எனக் குறைந்து 2 சீட்டில் வந்து நின்றார்கள். கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது கூடுதலாகத் திருவள்ளூர் தொகுதியைக் கேட்டுப் பெற்றதில் ஏராளமான சிரமங்கள் இருந்தன. இந்தமுறையும் சிதம்பரம் தொகுதியை மட்டுமே ஒதுக்கீடு செய்யும் முடிவில் ஸ்டாலின் இருந்தார். திருமாவளவன் காட்டிய உறுதியால்தான் கூடுதலாக ஒரு தொகுதியைப் பெற முடிந்தது’’ என விவரித்தவர்கள், 

திருமாவளவன், ஸ்டாலின்

``தி.மு.க அணிக்குள் ராமதாஸ் வராததால், அக்கட்சியில் உள்ள சீனியர்கள் சிலர் வி.சி.க-வுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். `ராமதாஸும் வேண்டாம் திருமாவளவனும் வேண்டாம்’ என்ற கருத்தையும் முன்வைத்தனர். மதச்சார்பற்ற அணியைக் கட்டமைப்பதற்காக முதன்முதலில் ராகுல்காந்தியை சந்தித்துத் தேசம் காப்போம் மாநாட்டுக்கு அழைப்புவிடுத்தார் திருமா. இந்தக் காட்சியை அறிவாலயத்தில் உள்ள சிலர் ரசிக்கவில்லை. `நம்மைத் தாண்டிப்போய் அவர் ராகுல்காந்தியை சந்திப்பாரா?’ என்ற ஆதிக்க மனநிலைதான் அவர்களுக்குள் இருந்தது. ஆனால், `பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான அணியைக் கட்டமைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்’ என்பதைக் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்தினார் திருமாவளவன். தவிர, இப்போது நாட்டில் தலித் தலைவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மாயாவதி உள்ளிட்டவர்கள் இருந்தாலும், அட்டவணைப் பிரிவு மக்களுக்காக முழுமையாக உழைக்கின்ற தலைவர்கள் இல்லை. அந்த இடத்தை நிரப்ப வேண்டிய தேவை, தனக்கு இருப்பதாக உணர்கிறார் திருமாவளவன். அதற்காகத்தான், `தி.மு.க கூட்டணியில் ஓர் இடம் கொடுத்தாலும் பொறுத்துக்கொண்டு நீடிப்போம். மக்களவையில் நம்முடைய குரல் எதிரொலிக்க வேண்டும்’ என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். இப்போது 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்றார் விரிவாக. 

ராகுல், திருமாவளவன்

வி.சி.க-வுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், `` கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரனுக்கு ஒரு தொகுதியும் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்போது 28 இடங்கள் மீதமுள்ளன. இதில், வி.சி.க-வுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கும் தலா 2 இடங்களை ஒதுக்கினால் 20 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாரிவேந்தர் கட்சிக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்தால் 19 தொகுதிகளில் போட்டியிட வேண்டியது வரும். இதைக் கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. `40 தொகுதிகளில் சரிபாதியை விட்டுக் கொடுத்தால் நல்லதல்ல' என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி என ஒதுக்கீடு செய்தாலும் பிரச்னை வரும். இவை அனைத்தையும் சரிசெய்யும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மதச்சார்பற்ற பிரமாண்ட அணியை உருவாக்குவதற்காக சிலவற்றைப் பொறுத்துக்கொள்ளும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்’’ என்கின்றனர் உறுதியாக. 


[X] Close

[X] Close