``சேலம் தொகுதிக்கு தடம் மாறுகிறாரா தம்பிதுரை?' -கரூர் அ.தி.மு.க-வில் விவாதம் | 'thambidurai may contest from salem

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (04/03/2019)

கடைசி தொடர்பு:13:16 (04/03/2019)

``சேலம் தொகுதிக்கு தடம் மாறுகிறாரா தம்பிதுரை?' -கரூர் அ.தி.மு.க-வில் விவாதம்

'மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியை துறந்துட்டு, சேலம் தொகுதிக்கு இடம் மாறப் போறாராமில்லே' என்பதுதான் கரூர் மாவட்ட அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்.

 தம்பிதுரை


 நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைக்க பல கட்சிகளும் முட்டி மோதி வருகின்றன. பல கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இழுத்துப் போட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க போன்ற கட்சிகள் கச்சைக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றன. அனைத்து தரப்பும் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கும் வேளையில், 'கரூர் தொகுதியை துறந்துட்டு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இந்தமுறை சேலம் தொகுதியில் நிற்கப் போறாராமே' என்ற தகவல் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது.
 

இதுபற்றி,விசாரித்தோம். நம்மிடம் பேசிய அ.தி.மு.க புள்ளிகள் சிலர், ``கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முறை எம்.பியாக இருந்திருக்கிறார் தம்பிதுரை. அதுவும் கடைசியாக தொடர்ந்து இரண்டு முறை எம்.பியாக இருக்கிறார். சில மாதங்களாகவே கரூர் தொகுதியில் மறுபடியும் போட்டியிட நினைத்து, கரூர் தொகுதி முழுக்க போய் மக்களிடம் மனு வாங்கி வருகிறார். ஆனால்,'அந்த வசதி இல்லை; இந்த வசதி செஞ்சு தரலை' என்றபடி, மக்கள் அவருக்கு பல கிராமங்களில் கடும் எதிர்ப்பு காட்டி வந்தார்கள். இதனால், தேர்தலில் நிற்பதை விட்டுட்டு, ராஜ்யசபா எம்.பியாக அ.தி.மு.க தலைமையிடம் கேட்டார். அது முடியவில்லை. இதனால், கரூர் தொகுதியையே வலம் வந்தார். ஆனால், இன்னொருபுறம் நாடாளுமன்றம், கட்சிக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என்று பல இடங்களில் பா.ஜ.கவுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வந்தார். இது பா.ஜ.க, அ.தி.மு.க உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தப் பார்த்தது. `அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து' என்று அ.தி.மு.க தலைமை சமாளிக்கப் பார்த்தாலும், தம்பிதுரையின் பா.ஜ.க மீதான சாடல் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.

இதனால், கடுப்பான பா.ஜ.க தலைமை அ.தி.மு.க தலைமை மூலமாக சுகாதாரத்துறை அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பியை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தம்பிதுரைக்கு போட்டியாக சீட் கேட்க வைக்க செய்தது. இதனால்,ஜெர்க்கான தம்பிதுரை பா.ஜ.க மீதான அட்டாக்கை சிலநாள்கள் குறைத்தார். ஆனால், மறுபடியும் இப்போது லேசாக பா.ஜ.க அட்டாக் செய்து வருகிறார்.

இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை கரூரில் சின்னதம்பியையே வேட்பாளராக்க நினைக்கிறதாம். இதனால், தம்பிதுரை சேலத்தில் நிற்க காய்நகர்த்தி வருவதாக சொல்கிறார்கள். ஆனால், முதல்வர் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் தம்பிதுரைக்கு சீட் கொடுப்பாரான்னு தெரியலை. நுணலும் தன் வாயால் கெடும் என்ற கதைபோல் ஆகிவிட்டது தம்பிதுரையின் அரசியல் நிலை" என்றார்கள்.
 
இந்த நிலையில், கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தம்பிதுரை,  ``நான் கரூர் தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்டி இருக்கிறேன். எனக்கு கரூரில் சீட் கிடைத்தால் சந்தோஷம். மத்தபடி, சேலம் என்ன, தமிழகத்தில் எந்தத் தொகுதியில் சீட் கொடுத்தாலும், தயங்காமல் களம் காணுவேன். அ.தி.மு.க தேர்தல் கமிட்டி முடிவுபடி நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார்" என்று சொல்லி இருக்கிறார். 


[X] Close

[X] Close