கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்முறையாக 10 பேர் நேரில் ஆஜர்! | 10 accused in Kodanad murder case appear before district judge in Ooty

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (04/03/2019)

கடைசி தொடர்பு:14:20 (04/03/2019)

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்முறையாக 10 பேர் நேரில் ஆஜர்!

நீலகிரி மாவட்டம், காெடநாடு காெலை, காெள்ளை வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட சயான், வாளையார் மனோஜ், திபு, ஜம்சிர் அலி, சதீசன், பிஜின் குட்டி, மனோஜ், உதயகுமார், சப்தோஷ் சமி, ஜிதின் ஜாய் என 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்தனர். வழக்கு விசாரணையில் இருந்தபோது கனகராஜ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் உள்ள நிலையில், முக்கிய நபர்களான சயான் மற்றும் வாளையார் மனோஜ் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து, கொடநாடு கொலை சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்புள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் மீது கொலைப்பழி சுமத்திய சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கொலை கொள்ளை வழக்கு மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கும் ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு10 குற்றவாளிகளும் ஒருமுறை கூட ஒன்றாக ஆஜராகவில்லை என நீதிபதி விசாரணையின்போது கடிந்துகொண்டார். இதற்கிடையே சயான், வளையார் மனோஜ் இருவரும் முறையாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால் ஜாமீனை ரத்து செய்து , இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார். இவர்கள் இருவரையும் கேரளாவில் கைது செய்த நீலகிரி போலீஸார் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பிஜின் குட்டி, திபு, மனாேஜ் சமி ஆகியோர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவர்களை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தனர்

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 பேர் மட்டுமே ஆஜராகினர். மற்றவர்களை கோவை மத்திய சிறையிலிருந்து அழைத்துவரும் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 11.30 மணியளவில் சயான், வாளையார் மனோஜ், திபு, பிஜின் குட்டி, மனோஜ் சமி  ஆகியாேர் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை 12 மணிக்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்தார். 12.15 மணியளவில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பாேது,  நீதிபதி முன்னிலையில் 10 பேரும் ஆஜராகினர். வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தும், 5 பேர் காவலையும் நீட்டித்தும் நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 


[X] Close

[X] Close