`அம்மாவை கொன்னுட்டீயே; என்னைக் கொன்னுருக்கலாமே!'-  கல்லூரி மாணவி கதறல்  | The college girl about her mother murder issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (04/03/2019)

கடைசி தொடர்பு:13:58 (04/03/2019)

`அம்மாவை கொன்னுட்டீயே; என்னைக் கொன்னுருக்கலாமே!'-  கல்லூரி மாணவி கதறல் 

   கல்லூரி மாணவியின் அம்மா ரேவதி

சென்னை கிண்டியில் திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணின் மகளான கல்லூரி மாணவி, `அம்மாவை கொலை செய்ததற்கு பதில் என்னைக் கொலை செய்திருக்கலாம்' என கண்ணீர் மல்க கூறினார். 

சென்னை கிண்டியைச் சேர்ந்தவர் ரேவதி (45). இவர் மார்ச் 1-ம் தேதி இரவு கிண்டி வண்டிக்காரன் தெருவில் நடந்து சென்றபோது கிண்டியைச் சேர்ந்த வினோத் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். கிண்டி போலீஸார், வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரேவதியின் மகள் சவிதாவை (பெயர் மாற்றம்) வினோத்துக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அதன்பிறகு வினோத்தின் நடவடிக்கை பிடிக்காமல் திருமணத்தை நிறுத்தியுள்ளார் ரேவதி. இதனால்தான் ரேவதியை வினோத் கொலை செய்ததாக போலீஸாரிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். 

ரேவதி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் சவிதா தரையில் புரண்டு கதறி அழுதார். அவருடன் அவரின் தங்கையும் கதறினார். சவிதா கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவருகிறார். அவரின் தங்கை பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். ரேவதி கொலையால் அந்தக் குடும்பமே நிலைக்குலைந்து காணப்படுகிறது. ஏற்கெனவே அப்பாவை இழந்த அந்தக் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு சவிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

  கல்லூரி மாணவியின் அம்மா ரேவதி

சவிதா கூறுகையில், ``என்னுடைய அப்பாவின் ஆசையை நிறைவேற்றதான் வினோத்தை திருமணம் செய்துகொள்ள நான் சம்மதித்தேன். அப்பா ராமசந்திரன் இறந்தபிறகு அம்மா ரேவதிதான் கஷ்டப்பட்டு என்னையும் தங்கையையும் படிக்க வைத்தார். நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். கல்லூரி முடிந்தபிறகு பகுதி நேர வேலை பார்த்துவருகிறேன். தங்கச்சி ப்ளஸ் டூ தேர்வு எழுதி வருகிறார். எனக்கும் வினோத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கார் ரேஸில் ஈடுபடும் பழக்கம் வினோத்துக்கு இருந்தது.  இதனால்தான் வினோத்தை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என என்னிடம் அம்மா கூறினார். அதன்பிறகு நான் கல்லூரிக்குச் சென்றுவந்தேன். ஆனால், வினோத் எனக்கு தொல்லை கொடுத்தார். இதனால் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் கொடுத்தேன். அப்போது அங்குள்ள போலீஸார் வினோத்தை எச்சரித்து அனுப்பினர். நாங்கள் கொடுத்த புகாருக்கு வினோத்தை போலீஸார் கைது செய்திருந்தால் இன்று அம்மாவை இழந்திருக்க மாட்டேன். 

  கல்லூரி மாணவியின் அம்மா ரேவதி

வினோத்தின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விட்டு விலகினோம். ஆனால், அவரோ விடாமல் என்னையும் என் குடும்பத்துக்கும் தொந்தரவு கொடுத்தார். திருமண நிச்சயதார்த்த படத்தை என்னுடைய தோழிகளுக்கு அனுப்பினார். இதனால் அவமானத்தை சந்தித்த நான் குடும்பச் சூழ்நிலை காரணமாக அமைதியாக இருந்தேன். வினோத்தை நான் காதலிக்கவில்லை. ஆனால், அவரோ எனக்கு பெரிய தண்டனையைக் கொடுத்துவிட்டார். அவர் என்னைக் கொலை செய்திருக்கலாம். என் அம்மாவை கொலை செய்து என் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டார். பாவம் என் தங்கை. இந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி ப்ளஸ் டூ தேர்வு எழுதப்போகிறார் என்பது தெரியவில்லை. அம்மாவை கொலை செய்த வினோத்தை நேரில் வரச்சொல்லுங்கள். அவரிடம் நியாயம் கேட்க வேண்டும். அப்பாவையும் அம்மாவையும் இழந்து அநாதையாக நிற்கிறோம். அம்மாவைக் கொலை செய்த வினோத்துக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்" என்றார் கண்ணீர் மல்க.

இதுகுறித்து கிண்டி போலீஸார் கூறுகையில்  ``வினோத் மீது ரேவதி குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீஸார் விசாரித்துள்ளனர். வினோத்தை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதன்பிறகு வினோத்தும் அமைதியாகதான் இருந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தபிறகு சவிதா மீது அளவுக்கடந்த அன்பை வினோத் வைத்துள்ளார். அந்த அன்புதான் அவரைக் கொலை செய்யும் அளவுக்கு தள்ளியுள்ளது. அதாவது, வினோத்தின் தொல்லையால் அந்தக் குடும்பம் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவந்துள்ளது.

இதனால் மகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருதிய ரேவதி அவரை விடுதியில் தங்க வைத்துள்ளார். இந்த விவரம் தெரியாத வினோத், கடந்த சில தினங்களாக சவிதாவைப் பார்க்க முடியாமல் தவித்துள்ளார். இதனால்தான் ரேவதியை சந்தித்து சவிதா குறித்து கேட்கச் சென்றபோதுதான் வாக்குவாதம் முற்றி அது கொலையில் முடிந்துள்ளது. தான் செய்த தவற்றை வினோத் உணர்ந்தபடியே எங்களிடம் பேசினார். இன்னமும் அவருக்கு சவிதா மீது அன்பும் பாசமும் இருக்கிறது. அவரை திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில்தான் வினோத் இருக்கிறார்" என்றனர். 


[X] Close

[X] Close