``நான் இப்போ திண்டுக்கல்லிலேயே இல்லை" - அப்டேட் ஆகாத உழவன் செயலி! | the uzhavan app data is not updated

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (04/03/2019)

கடைசி தொடர்பு:15:00 (04/03/2019)

``நான் இப்போ திண்டுக்கல்லிலேயே இல்லை" - அப்டேட் ஆகாத உழவன் செயலி!

விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மைத்துறை சார்பில் தொடங்கப்பட்ட இணையதளம், 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போன்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலியின் மூலம், வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். 

உழவன் செயலி

வேளாண் மானியத் திட்டங்கள் பற்றி அறிதல், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீட்டு விவரம் அறிதல், உரம் இருப்பு அறிதல், விதை இருப்பு விவரம் அறிதல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், விளைபொருள்களின் சந்தை விலை அறிதல், வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகை என பல சேவைகள் இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளன. 

உழவன் செயலி

கடந்த ஆண்டு சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த உழவன் செயலி தற்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளத் திண்டுக்கல் மாவட்ட கம்பு இருப்பு விவரங்களைத் தேடினேன். அதில் கொடுக்கப்பட்டுள்ள வேளாண் அதிகாரி ராஜா என்பவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, ``நான் திண்டுக்கல்லில் இப்போது இல்லை. அது தவறான தகவல்" என்றார். மேலும், பேச முயன்றபோது தொடர்பைத் துண்டித்துவிட்டார். இது ஒரு தவறுதான் என்றல்ல. உழவன் செயலியில் ஏராளமான தகவல்கள் பழைய தகவல்களாகவே இருக்கின்றன. புதிய திட்டங்கள், எளிதான பரிமாற்றம், வேலை குறைவு என்பதற்காகத்தான் உழவன் செயலி கொண்டு வரப்பட்டது. ஆனால், தவறான, பழைய தகவல்களையே இன்னும் வைத்திருக்கிறார்கள். புதிய செயலியை அறிமுகப்படுத்தி ஓராண்டு ஆகப்போகிறது, இன்னும் அப்டேட் செய்யவில்லை என்பது வேளாண்மைத்துறையின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவே இருக்கிறது. 


[X] Close

[X] Close