போலீஸ் உதவி கமிஷனருக்கு கேக் ஊட்டும் மோசடி புகாரில் சிக்கியவர்!- வைரலாகும் புகைப்படங்கள்  | fraud person celebrates with police commissioner in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (04/03/2019)

கடைசி தொடர்பு:14:35 (04/03/2019)

போலீஸ் உதவி கமிஷனருக்கு கேக் ஊட்டும் மோசடி புகாரில் சிக்கியவர்!- வைரலாகும் புகைப்படங்கள் 

போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராயனுக்கு கேக் ஊட்டும் புகைப்படம்

மோசடிப் புகாரில் சிறைக்குச் சென்ற நபர், போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராயனுக்கு கேக் ஊட்டும் புகைப்படம் வைரலாகிவருகிறது. 

சென்னை முகப்பேர், ஆபீஸர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் டில்லி பாட்ஷா. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என் மகன் மதன் டில்லி, வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். வடபழனி, குமரன் காலனியில் சிரதா கன்ஸ்டிரஷனை நடத்திவரும் சரவந்த் என்பவர், அமைந்தகரையில் கட்டப்போவதாக அறிவித்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டை என் மகனுக்காக வாங்க முடிவு செய்தேன். 1,016 சதுர அடி கொண்ட பிளாட்டின் விலை அறுபத்தி மூன்று லட்சத்து பன்னிரண்டாயிரம் என சரவந்த் கூறினார்.

இதையடுத்து முப்பது லட்சத்து இருபத்தொன்பதாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அதற்கான ரசீதையும் அவர் கொடுத்தார். 20 மாதங்களில் வீட்டை கட்டிக் கொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால், அவர் வீட்டை கட்டிக் கொடுக்கவில்லை. சரவந்த்திடம் நேரில் சென்று விளக்கம் கேட்டேன். ஆனால், அவர் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் பதிவு அலுவலகத்தில் வில்லங்கம் போட்டுப் பார்த்தேன். அதன் விவரங்கள் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. எனக்குத் தர வேண்டிய வீட்டை சரவந்த் வேறு ஒருவருக்கு விற்றது தெரியவந்தது. மேலும், அவர் அந்த இடத்தை பலபேருக்கு விற்றும் ரத்து செய்தும் உள்ளார். இதனால் கடந்த 4.3.2017ல் சரவந்த்தை சந்தித்தபோது அவர் என்னை தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பாக 9.5.2017ல் சென்னை அண்ணாநகர் சரக உதவி கமிஷனர் சந்திரசேகரனைச் சந்தித்து புகார் கொடுத்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் எனக்குத் தருவதாகக்கூறி பணத்தை வாங்கி ஏமாற்றிய வீட்டை வேறுயாருக்கும் விற்கக்கூடாது என்றும் அங்கு கட்டடப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினேன். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி கட்டடப் பணிகள் அங்கு நடந்துவருகின்றன. என்னை ஏமாற்றிய சரவந்த் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தப் புகாரின் பேரில் சரவந்த்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு நடந்த சம்பவம்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவந்த், போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராயனுக்கு கேக் ஊட்டும் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. முதலில் உதவி கமிஷனர் சுப்புராயன், சரவந்துக்கு கேக் ஊட்டுகிறார். அதன்பிறகு சரவந்த், உதவி கமிஷனர் சுப்புராயனுக்கு கேக் ஊட்டுகிறார். 

 போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராயனுக்கு கேக் ஊட்டும் புகைப்படம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சரவந்த்தை கைது செய்ததும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர். சரவந்த்தின் கட்டுமான நிறுவனம் வடபழனியில் செயல்படுகிறது. அப்போது வடபழனி சரகத்தில் உதவி ஆணையராக இருந்த சுப்புராயன் என்பவருக்கும் சரவந்த்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு வடபழனியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட உதவி ஆணையர் சுப்புராயன், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது சரவந்த் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். சரவந்த் மீது மடிப்பாக்கம், அமைந்தகரை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

உதவி கமிஷனர் சுப்புராயனுக்கு சரவந்த் கேக் ஊட்டும் புகைப்படத்தில் கே.கே.நகரைச் சேர்ந்த ஒருவர் உள்ளார். அவர், கம்ப்யூட்டரில் சில நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர். இதனால், சூரியன் பெயரைக் கொண்ட துணை கமிஷனர் ஒருவருக்கு அந்த நபர் அறிமுகமாகினார். அதன்பிறகு காவல்துறையில் அசைக்க முடியாத சக்தியாக கே.கே.நகர் நபர் வலம்வருகிறார்" என்றனர். 

இதுகுறித்து உதவி கமிஷனர் சுப்புராயனிடம் விளக்கம் கேட்க அவரை பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரீசிலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம். அவரின் சார்பில் பேசிய இன்ஸ்பெக்டர் ஒருவர், `உதவி கமிஷனர் சுப்புராயன் நல்லவர். அவரும் சரவந்த் இருக்கும் புகைப்படம் பிறந்தநாளில் எடுக்கப்பட்டது. அப்போது சரவந்த் மீது எந்தவிதப் புகாரும் இல்லை' என்றார். 

ஏற்கெனவே சேலம் ரவுடியின் பிறந்தநாளுக்கு கேக் ஊட்டிய  கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கருணாகரன் படம் வெளியானது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கருணாகரன் சென்னைக்கு இடமாற்றப்பட்ட நிலையில், ரவுடிகளை இன்ஸ்பெக்டரிடம் அழைத்துவந்ததாகக்கூறி  தலைமைக் காவலர் ஏழுமலை சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது, தமிழக காவல்துறையில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது சென்னை போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராயனுக்கு மோசடிப் புகாரில் சிறைக்குச் சென்ற ஒருவர் கேக் ஊட்டும் படம் வெளியாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close