`உதயசூரியனா...மோதிரமா?' - தனிச் சின்னத்தில் களமிறங்குவாரா திருமா?  | did vck leader thirumavalavan contest in dmk symbol?

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:03 (16/03/2019)

`உதயசூரியனா...மோதிரமா?' - தனிச் சின்னத்தில் களமிறங்குவாரா திருமா? 

2001 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார் தலைவர் திருமாவளவன். ஆனால், 2004-ம் ஆண்டு தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். சிறிய முரண்பாட்டின் காரணமாகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

`உதயசூரியனா...மோதிரமா?' - தனிச் சின்னத்தில் களமிறங்குவாரா திருமா? 

தி.மு.க அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. `உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான் 2 சீட்டுகளை தி.மு.க ஒதுக்கீடு செய்துள்ளதாகச் சொல்கின்றனர். தனிச் சின்னத்தில் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள். 

திருமாவளவன்

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை அணிவகுத்துள்ளன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியோடு சேர்த்து 10 இடங்களும் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்குத் தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க - வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வி.சி.க போட்டியிடும் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாகப் பேட்டியளித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், `கூட்டணியின் நலன் கருதி, கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து முடிவெடுப்போம்' எனத் தெரிவித்தார். அவரது இந்த விளக்கம் வி.சி.க நிர்வாகிகள் மத்தியில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

துரைமுருகன், டி.ஆர்.பாலு

மோதிரம் சின்னத்தைக் கேட்டுத் தேர்தல் ஆணையத்தில் வி.சி.க மனு கொடுத்துள்ள நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை அக்கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை. இதுதொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸிடம் பேசினோம். ``உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலங்களில் தனிச் சின்னத்தில் நின்று நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். 2001 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார் தலைவர் திருமாவளவன்.

ஆளூர் ஷாநவாஸ்

ஆனால், 2004-ம் ஆண்டு தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். சிறிய முரண்பாட்டின் காரணமாகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார். இதன்பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் சுயேட்சை சின்னத்திலேயே களமிறங்கியிருக்கிறோம். 2009 மக்களவைத் தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் நின்று அவர் எம்.பி ஆனார். அதன்பிறகு 2011 தேர்தலிலும் 2016 தேர்தலிலும் மோதிரச் சின்னத்தில் நின்றோம். மக்கள் நலக் கூட்டணியின் சார்பாகப் போட்டியிட்டபோது, 48,000 ஓட்டுக்களை வாங்கினார். அந்தத் தேர்தலில் விஜயகாந்த் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். தனி சின்னத்தில் நிற்பது என்ற முடிவை எடுப்பதற்குக் காரணம், கடந்த கால படிப்பினைகள்தான்" என்றார் நிதானமாக. 

வன்னியரசு

இதே கருத்தைப் பிரதிபலிக்கும் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ``மோதிரச் சின்னத்தைக் கேட்டுத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க அழுத்தம் கொடுக்கப்படுவதாகச் சொல்வது தவறான தகவல். ஏற்கெனவே, நட்சத்திர சின்னத்திலும் மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டிருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு" என்றார் உறுதியாக.

உதயசூரியனா...மோதிரமா என்ற விவாதம் வி.சி.க முகாமில் தொடர்ந்து எதிரொலித்தபடியே இருக்கிறது
 


[X] Close

[X] Close