`கடன் பிரச்னையால் கள்ளநோட்டுகளை அச்சடித்தேன்!'- பட்டதாரிப் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் | Cuddalore Women Arrested for producing fake notes

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (04/03/2019)

கடைசி தொடர்பு:14:51 (04/03/2019)

`கடன் பிரச்னையால் கள்ளநோட்டுகளை அச்சடித்தேன்!'- பட்டதாரிப் பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

கடன் பிரச்னையால் கள்ளநோட்டு அடித்த பட்டதாரிப் பெண்ணை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கடலூர் அருகே உள்ள பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்  தமிழரசி. கடலூர் முதுநகர் அருகே  உள்ள சேடப்பாளையத்தைச் சேர்ந்தவர்  குமுதா. இவர்கள் இருவரும் கடலூர் பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்துவருகிறார்கள். இவர்கள், நேற்று வழக்கம்போல  பழ வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். பகல் 1 மணியளவில் சுடிதார் அணிந்து ‘டிப்டாப்’பாக வந்த ஒரு பெண், குமுதாவிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை கேட்டார். ஆனால் அவர் இல்லை என்று கூறினார். 

கள்ளநோட்டு அச்சடித்த பரணிகுமாரி

இதையடுத்து, அவருக்குப் பக்கத்தில் இருந்த தமிழரசியிடம் சில்லறை கேட்டார். அந்த ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்தபோது 
அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே தமிழரசி, அந்தப் பெண்ணிடம் தனக்குத் தெரிந்த நபரிடம் சில்லறை வாங்கி வருவதாகக் 
கூறிவிட்டு, அவரும் குமுதாவும்  2 ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் காண்பித்தனர்.  அந்த ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்த போலீஸார், அது கள்ளநோட்டு என்பதைக் கண்டுபிடித்தனர். இதனை அறிந்த அந்த டிப்டாப் பெண், அங்கிருந்து மாயமானார். உடனே போலீஸார் அந்தப் பெண்ணை  பஸ் நிலையம் முழுவதும் தேடினர். அப்போது, கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் டவுன் பஸ்சில் அந்த பெண் அமர்ந்திருப்பதை போலீஸார் பார்த்தனர். உடன் அந்த பெண்ணை போலீஸார் பிடித்து, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பரணிகுமாரியிடம் கைப்பற்றபட்ட கள்ளநோட்டுடன் போலீஸார்

அப்போது, சிதம்பரம் மாரியப்பா நகர் 3-வது குறுக்குதெருவைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி பரணிகுமாரி (35) எனத் தெரியவந்தது. அவரது கையில் 66 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.  மேலும், தொடர்ந்து பரணிகுமாரியிடம்  போலீஸார் விசாரணை நடத்தியதில், `தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் யூடியூப் பார்த்து கள்ளநோட்டை அடித்ததாகவும்,  இதனைக் கடலூர் பஸ் நிலையத்தில் புழக்கத்தில் விடும்போது  மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். அவரிடமிருந்து கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் பேப்பர், கத்தரிக்கோல் அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பரணிகுமாரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். 


[X] Close

[X] Close