`எங்க கூட்டணியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்!"- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | DMDK will join ADMK alliance, says Minister MR Vijayabhaskar

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:10 (16/03/2019)

`எங்க கூட்டணியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்!"- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

``தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெற்றிக் கூட்டணியை விரைவில் அமைப்பார்கள். தே.மு.தி.க நிச்சயம் இதில் பங்கேற்கும்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எம் ஆர் விஜயபாஸ்கர்

கரூர் மற்றும் கரூர் நகராட்சியையொட்டியுள்ள ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் 5 கோடியே 77 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையிடும் நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெற்றிக் கூட்டணியை விரைவில் அமைப்பார்கள். தே.மு.தி.க நிச்சயம் இதில் பங்கேற்கும். நாற்பதும் நமதே என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், எப்படியாவது ஜெயித்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க தலைமையில் அமைத்த கூட்டணியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.

2011-ல் ஒரு லட்சம் கோடி தி.மு.க ஆட்சி கடன் வைத்து விட்டது எனத் தேர்தல் பிரசாரத்தின் போது பரப்புரை மேற்கொண்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க, தொடர்ந்து இரண்டாவது முறையும் ஆட்சி செய்யும் வேளையில் தற்போது 4 லட்சம் கோடி வரை கடன் உள்ளதே என்று கேட்கிறீர்கள். தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் வரம்பைத் தாண்டாத நிலையில் தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்கள் எல்லாம் அதிக கடன் சுமையில் உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,70,000 கோடி முதலீடு ஈட்டப்பட்டது.

தற்போதைய முதலமைச்சர் தலைமையில் 3 லட்சம் கோடிக்கும் மேலாக உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு வளர்ச்சிப் பாதையில் செல்வதால் அனுமதிக்கப்பட்ட அளவுதான் கடன்தொகை உள்ளது. இதனால் பயப்பட தேவையில்லை. அ.தி.மு.க ஆட்சியில் மிக்ஸி, கிரைண்டர், தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் தேர்தலைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. தற்போது 2000 ரூபாய் வழங்கப்படுவது என்பது வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு என அரசு ஒரு வரைமுறையை ஏற்படுத்தி வழங்கப்படுகிறது. தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரூபாய் 2000 வழங்கப்படும்” என்றார்.
 


[X] Close

[X] Close