சாத்தூர் பெண்ணின் குழந்தையின் ரத்த மாதிரி சோதனை! - மதுரை அரசு மருத்துவமனை டீன் தகவல் | Sattur infant's blood sample to tested in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (04/03/2019)

கடைசி தொடர்பு:16:25 (04/03/2019)

சாத்தூர் பெண்ணின் குழந்தையின் ரத்த மாதிரி சோதனை! - மதுரை அரசு மருத்துவமனை டீன் தகவல்

சாத்தூர் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு, ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ரத்தப் பரிசோதனை செய்வதற்காக, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார்.

துரை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி, இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தம் குறைவாக இருப்பதால் ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி,  அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.அதன் காரணமாக, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்ததும், அரசு தனிக் கவனம் செலுத்தியது. 

கடந்த ஜனவரி 17-ம் தேதி, கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவரின் குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி. இருக்கலாம் எனப் பயப்படும் நிலையில், குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளதா என்பதுகுறித்து  பாலிமெர்சி செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்)   ரத்தப் பரிசோதனை செய்வதற்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான ஆய்வுகள் செய்து, 15 முதல் 30 நாள்களில் ஆய்வு அறிக்கை கிடைக்கும் எனத் தெரிவிக்கிறார், மருத்துவமனை முதல்வர் வனிதா.

மேலும், முதல் பரிசோதனை முடிவுக்குப் பிறகு, 6 மாதத்தில் ஒரு பரிசோதனையும், 18 மாதத்தில் ஒரு பரிசோதனையும் நடத்தப்படும் எனவும், மூன்று பரிசோதனைகளின் முடிவில்தான் ஹெ.ஐ.வி உள்ளதா இல்லையா என்பது முழுமையாகத் தெரியவரும், அதற்குத் தகுந்தவாறு சிகிச்சைகள் அளிக்கப்படும். குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு அடைவதற்கு அதிகபட்சம் வாய்ப்புகள் இல்லை என மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.


[X] Close

[X] Close