`உயிர், உடமை பாதிப்புக்கு பொறுப்பு ஏற்க மாட்டோம்!’ - ஈஷா நிகழ்ச்சியும் வனத்துறை கடிதமும் | Forest department letter over ISHA Maha sivarathiri

வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (04/03/2019)

கடைசி தொடர்பு:18:18 (04/03/2019)

`உயிர், உடமை பாதிப்புக்கு பொறுப்பு ஏற்க மாட்டோம்!’ - ஈஷா நிகழ்ச்சியும் வனத்துறை கடிதமும்

``கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவின்போது, வன விலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க மாட்டோம்'' என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவை ஈஷா யோக மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். இதனிடையே, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ஈஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "வெற்றிச்செல்வன் என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், மகா சிவராத்திரிக்காக ஈஷா வரும் பொதுமக்களுக்கு, வன உயிரினங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதையும், வன உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது, வனப்பகுதி வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் வெளியில் வருகின்றன. அப்படி வரும்போது, மனித - விலங்கு மோதல் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஈஷா நிறுவனம், 4-3-2019, 5-3-2019 தினங்களில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த உள்ளது. எனவே, ஈஷா நிறுவனம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருபவர்கள், முள்ளங்காடு வன சோதனைச் சாவடி வழியாகச் செல்லும் வனச் சாலையில் செல்லக் கூடாது. வாணவேடிக்கை, பட்டாசு வெடித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.  அதிக ஒளி எழுப்பும் விளக்குகள், ஒலிபரப்பும் ஒலி பெருக்கிகள் மற்றும் ஜெனரேட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

ஈஷா

போலுவாம்பட்டி பிளாக் 2 வனப்பகுதிக்கு எக்காரணத்தைக் கொண்டும் செல்லக் கூடாது. வனப்பகுதிக்குள் நெருப்பு பரவும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். விழா நடக்கும் இடத்தில் போடப்படும் குப்பைகள், வனப்பகுதிக்கு வராமல் தடுக்க வேண்டும். விழா நடைபெறும் இடத்தில் விளக்குகள் அமைக்க வேண்டும். பணியாளர்களை அமர்த்தி, யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.  சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்.  மகா சிவராத்திரி நடைபெறும் நாள்களில், வனத்துக்குள்ளோ, வனத்தை ஒட்டிய பகுதிகளிலோ, வன உயிரினங்களால் விழாவுக்கு வரும் மக்களின் உயிருக்கோ, உடமைகளுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பு ஏற்பதோ... இழப்பீடு வழங்குவதோ இயலாது" என்று கூறப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close