`சமூக வலைதளம் மூலமாக பரதத்தில் கின்னஸ் சாதனை!' - தில்லை நாட்டியாஞ்சலி குழு | Guinness Record - 7190 Bharathanatyam Dancers at Chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (04/03/2019)

கடைசி தொடர்பு:19:20 (04/03/2019)

`சமூக வலைதளம் மூலமாக பரதத்தில் கின்னஸ் சாதனை!' - தில்லை நாட்டியாஞ்சலி குழு

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில், நேற்று 7190 பரதக் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து, 18 நிமிடங்கள் பரதம் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சின்னமனூர் சித்ராவைத் தொடர்புகொண்டோம்.

கின்னஸ் சாதனை

சித்ரா

"இறைவனுக்காக நடத்திய நிகழ்ச்சி, அந்த இறைவன் அருளால்தான் சாத்தியமானது. நாட்டியத்தில் தனி ஒருவராக மணிக்கணக்கில் ஆடி சாதனை படைப்பது எளிது. ஆனால், இத்தனை பேரையும் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு ஒரே மாதிரியான முக பாவங்களையும், நளினங்களையும் கொண்டு வருவது சற்று சிரமமான விஷயம். அதற்காக, 8 மாதம் பயிற்சிகள் மேற்கொண்டோம். இதில் சிறப்பு என்னவெனில், நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு முறைகூட ரிகர்ஷல் செய்யவில்லை"என ஆச்சர்யப்படுத்தினார்.

"நாட்டியத்தில் கின்னஸ் முயற்சி என தில்லை நாட்டியாஞ்சலி குழுவினர் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தோம். வெவ்வேறு மாவட்டங்களில் ,மாநிலங்கள், நாடுகளில் இருந்து 256 குருமார்களின் கீழ் 7190 கலைஞர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க சமூகவலைதளம் உதவியது. நிகழ்ச்சியன்று ஆடப்போகும் நடனத்தின் தொகுப்பை, ஒருவரை மட்டும் ஆடச்செய்து, ஒரு வீடியோவாக எடுத்தோம். கின்னஸ் முயற்சிக்கு பெயரைப் பதிவுசெய்த அத்தனை பேருக்கும் அந்த வீடியோவை அனுப்பிவைத்தோம். 

ஒவ்வொருவரும் அதைப் பார்த்து பயிற்சிசெய்து, அவ்வப்போது அவர்களின்  வீடியோக்களையும் எங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். திருத்தங்கள் தேவைப்பட்டால், வீடியோவின் மூலமே விளக்கம் அளித்தோம். இப்படித்தான் அத்தனை கலைஞர்களும் ஓரே மாதிரியான பயிற்சியை மேற்கொண்டோம். நாட்டியாஞ்சலி அன்று அணியப்போகும் ஆடை அணிகலன்கள், அலங்காரம் எல்லாவற்றையும் சமூக வலைதளம் மூலமாகவே ஒருங்கிணைத்தோம்.எந்த முன்பதிவு இசையும் இல்லாமல், நட்டுவாங்க இசைக்கு ஏற்ப கலைஞர்கள் ஒரே மாதிரியாக 4 பிராகாரங்களில் நடனமாடியது கூடுதல் ஸ்பெஷல். கின்னஸ் ஆய்விற்காக வந்தவர்கள், உண்மையில் மெய் சிலிர்த்துப்போய்விட்டனர். நடனம் ஆடிய ஒவ்வொருவருக்கும், 'ஆடல் நன்மணி'விருதும், பயிற்சி வழங்கிய குருமார்களுக்கு 'சிதம்பரஸ்ய நாட்டிய கலைமணி'விருதும் வழங்கப்பட்டது. இது, கலைக்கும் கலைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி" என்கிறார் மகிழ்ச்சியுடன்.


[X] Close

[X] Close