`எடப்பாடி பழனிசாமி செய்தது மிகப்பெரிய துரோகம்!'- பா.ஜ.க கூட்டணியால் கொதிக்கும் பி.ஆர்.பாண்டியன் | Pr pandian slams bjp and admk

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:13 (16/03/2019)

`எடப்பாடி பழனிசாமி செய்தது மிகப்பெரிய துரோகம்!'- பா.ஜ.க கூட்டணியால் கொதிக்கும் பி.ஆர்.பாண்டியன்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து அ.தி.மு.கவும் துரோகம் இழைத்துவிட்டதாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.

பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் தேர்தல் அறிக்கை குறித்து தமிழகம் தழுவிய பரப்புரை பயணம் செய்து வரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு நேற்று ஊட்டி வந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரு முனைப் பிரசாரம் மேற்கொண்டது. தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் அறிக்கை நகலை வழங்கியது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கடந்த 16-ம் தேதி விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் அறிக்கை நகலை வெளியிட்டோம். அதில், 46 கொள்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, 1-ம் தேதி முதல் இதை மக்களுக்கு கொண்டு செல்லும் பரப்புரை செய்து வருகிறோம். 

5 மாவட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று ஊட்டி வந்துள்ளோம். இந்தப் பிரசாரத்தை முல்லை பெரியாரில் உள்ள பென்னிகுயிக் மண்டபத்திலிருந்து தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக குறித்த சமயத்தில் மழை பெய்வதில்லை. இரு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை இரு நாள்களில் கொட்டித் தீர்த்து விடுகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் 463 இடங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதில், நீலகிரி மாவட்டமும் அடங்கும். நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலான பகுதிகள் கட்டடச் சோலைகளாக மாறியுள்ளன. பசுமை மற்றும் இயற்கை அழகும் அழிந்துவிட்டது. பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் தற்போது பெரிய முதலாளிகள் வசம் சென்றுவிட்டன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.30ம், தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.140 ம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழக விவசாயிகள் மற்றும் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். மேக்கே தாட்டூ அணை, காவிரி பிரச்னை மற்றும் முல்லை பெரியார் போன்ற விவகாரங்களில் தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். நெல்லுக்கு உரிய விலை வழங்கப்படவில்லை. விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த மோடியுடன், அதாவது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருக்கக் கூடாது. இது அ.தி.மு.கவும் எடப்பாடி பழனிசாமியும், தமிழக விவசாயிகளுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை என அ.தி.மு.க கூறி வரும் நிலையில், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. 

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது எனக் கூறும் மோடி, பெரும் முதலாளிகளின் 4 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளார். இதனால், இவர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமன்றி, நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். வரும் 8-ம் தேதி இந்தப் பரப்புரை பயணம் நிறைவடைகிறது. அன்றைய தினம் தஞ்சையில் நடக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முடிவு அறிவிக்கப்படும்'' என்றார். முன்னதாக நடந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் படுக தேச பார்ட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் மஞ்சைமோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


[X] Close

[X] Close