சந்தேகத்தை ஏற்படுத்திய சொகுசு கார்! - ரூ.6 லட்சம் மதிப்பிலான பீடி இலையுடன் சிக்கிய 2 பேர் | Customs officials captures rupees 6 lakh worth beedi leaf near mandapam

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (04/03/2019)

கடைசி தொடர்பு:19:50 (04/03/2019)

சந்தேகத்தை ஏற்படுத்திய சொகுசு கார்! - ரூ.6 லட்சம் மதிப்பிலான பீடி இலையுடன் சிக்கிய 2 பேர்

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான உயர் தர  பீடி இலை மூட்டைகளை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூடைகள்
 

மண்டபம் அருகே உள்ள வேதாளைப் பகுதி கடற்கரையில் இருந்து, இன்று அதிகாலை  பீடி இலைகள் கடத்த இருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்குத்  தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத் துறையினர், வேதாளை  கடற்கரைப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த சொகுசு கார் ஒன்றை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில்,  இலங்கைக்கு சட்ட விரோதமாகக் கடத்துவதற்காக 12 மூட்டைகளில் 600 கிலோ எடை கொண்ட உயர் ரக பீடி இலை மூட்டைகள் இருந்தன.

இதையடுத்து, பீடி இலைகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல்செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட வேதாளைப் பகுதியைச் சேர்ந்த ரஷீது மற்றும் அன்வர்தீன் ஆகிய இருவரையும் கைதுசெய்து, விசாரணைக்காக  ராமநாதபுரம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர். கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், பீடி இலைகளை வாங்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த நபர்கள் யாரேனும் வேதாளை கடற்பகுதிக்கு வந்துள்ளனரா  என்பதுகுறித்தும் சுங்க அதிகாரிகள் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பீடி இலைகள், உயர் ரகமானவை எனவும், இதன் இலங்கை மதிப்பு 6 லட்சம் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 10 நாள்களுக்குள்ளாக,  இலங்கைக்கு சட்ட விரோதமாகக் கடத்த இருந்த 2 டன் எடை கொண்ட 17 லட்ச ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள், சுங்கத் துறையினாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close