4 வருடங்களாக வீடு கட்டித்தரவில்லை - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் | Transgender's protest at tirupur collectorate

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (04/03/2019)

கடைசி தொடர்பு:20:20 (04/03/2019)

4 வருடங்களாக வீடு கட்டித்தரவில்லை - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் வசிக்கும் சுமார் 51 திருநங்கைகளுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வரை வீடு கட்டித் தரவில்லை எனக்கூறி திருப்பூரில் வசிக்கும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய திருநங்கைகள், ``கடந்த 2015-ம் ஆண்டு நெருப்பெரிச்சல் என்ற பகுதியில் எங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. அங்கே வீடுகள் கட்டிக் கொள்வதற்காக இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் நிதியும் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 4 வருடங்களாக வீடுகள் கட்டிக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். அத்துடன் குறிப்பாக வீடு கட்டிக்கொடுக்க பணம் செலுத்தியாக வேண்டும் என்றும் அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள் எனப் புகார் தெரிவித்த திருநங்கைகள், எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையின்படி, அரசு உடனடியாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய திருநங்கைகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள், அவர்கள் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட பிறகே, திருநங்கைகள் போராட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர்.


[X] Close

[X] Close