`சிறுத்தை இல்லை... வேட்டை நாய்!’ - கிராம மக்களை மிரட்டும் ஆம்பூர் வனத்துறை | Forest department threatening us over leopard issue, complains ambur village people

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (04/03/2019)

கடைசி தொடர்பு:20:50 (04/03/2019)

`சிறுத்தை இல்லை... வேட்டை நாய்!’ - கிராம மக்களை மிரட்டும் ஆம்பூர் வனத்துறை

``ஆடு, மாடுகளைக் கொல்லும் சிறுத்தையைப் பற்றி யாராவது கேட்டால், 'சிறுத்தை வரவில்லை. வேட்டை நாய்கள் கடித்துக் குதறிவிட்டதாகப் பொய் சொல்லுங்கள்’’ என்று கிராம மக்களை மிரட்டுவதாக, ஆம்பூர் வனத்துறையினர் மீது புகார் எழுந்திருக்கிறது.

சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த கன்று

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே உள்ளனர். ஆந்திர வனப்பகுதியிலிருந்து இரைதேடி வெளியேறும் சிறுத்தைகள், தமிழக காப்புக்காட்டிற்குள் புகுந்துவிடுகின்றன. இரை கிடைக்காததால், வனப்பகுதியை ஒட்டியிருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன. ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் பல ஆண்டுகளாக சிறுத்தையின் தாக்குதல் தொடர்கிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லாமல், வீட்டின் முற்றத்தில் கட்டி பாதுகாத்தாலும் சிறுத்தை பாய்ந்துவந்து அடித்துக் கொல்கிறது. 

சமீபகாலமாக, மனிதர்களையும் சிறுத்தைகள் தாக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய வனத் துறையினர், அலட்சியமாகச் செயல்படுவதால்தான், சிறுத்தையின் தாக்குதல்கள் தொடர்கின்றன என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள். ``ஆடு, மாடுகளை வேட்டையாடிக் கொன்றால் பரவாயில்லை, யாரும் சிறுத்தையைத் தாக்கிவிடக் கூடாது’’ என்று வனத்துறையினர் எச்சரிப்பதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர். ஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... அடுத்து மனிதர்களை வேட்டையாடுவதற்காக வெறியுடன் பதுங்கியிருக்கும் சிறுத்தையைப் பிடிக்க தீவிரம் காட்டாமல், பெயருக்குக் கூண்டை கொண்டுவந்து வைத்துவிட்டுச் செல்கின்றனர். சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் கிராம இளைஞர்களைக் கட்டாயப்படுத்துவதாகவும் வனத்துறையினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

நேற்றிரவு, ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, பழனி என்ற விவசாயிக்குச் சொந்தமான கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கிராம மக்கள் கடும் பீதியில் இருக்கிறார்கள். தகவலறிந்து வந்த வனத் துறையினர், சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபடாமல், கிராம மக்களை மிரட்டுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ``ஆடு, மாடுகளைச் சிறுத்தை வேட்டையாடினாலும், வேட்டைக் கும்பல் அல்லது வேட்டை நாய் தாக்கியதில் இறந்துவிட்டதாக ஊடகங்களிடம் பொய் சொல்ல வேண்டும். சிறுத்தை வந்ததைக் கூறினால், எங்களுக்குத்தான் தலைவலி. உயரதிகாரிகள் எங்கள் உயிரை வாங்குகிறார்கள். எங்கள் தூக்கம் போகிறது. சிறுத்தையைப் பற்றி இனி யாரும் ஊடகங்களுக்கு மட்டுமின்றி வெளியாட்கள் யாருக்கும் தகவல் சொல்லக் கூடாது’’ என்று வனத் துறையினர் மிரட்டியதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
 


[X] Close

[X] Close