`8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கொள்முதல் விலை!’ - பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் | milk producers staged protest in virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (04/03/2019)

கடைசி தொடர்பு:21:35 (04/03/2019)

`8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கொள்முதல் விலை!’ - பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

பாலுக்கு 8 ஆண்டுகளாக கொள்முதல் விலை உயர்த்தப்படாததைக் கண்டித்து பாலை கீழே கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

`பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-ம், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.45-ம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாள்களுக்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பாரத பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலச்சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் பாலமுருகன் கூறும்போது, ``கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையே தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டருக்கு ரூ.25 முதல் 26 வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 8 ஆண்டுகளில் கால்நடைகளுக்கான தீவன விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் மாடு வளர்க்க முடியாமல் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 90 நாள்களாக வழங்கப்படாமல் உள்ளது. ஆனால் ஆரோக்கியா நிறுவனத்தில் ஒரு வாரத்துக்குள் பணம் வழங்கிவிடுகின்றனர். அதிக விலையும் தருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதால்தான் நாங்கள் ஆவின் நிறுவனத்துக்குப் பால் ஊற்றுகிறோம். ஆனால் எங்களுக்கு நட்டம் ஏற்பட்டு மாடு வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். ஆவின் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் முதலில் எங்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.


[X] Close

[X] Close