`விஜயகாந்த் உறுதியாக இருப்பார்; இன்றோ, நாளையோ முடிவு!’ - ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பின் ஓ.பி.எஸ் | DMDK will join ADMk alliance, says OPS

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:16 (16/03/2019)

`விஜயகாந்த் உறுதியாக இருப்பார்; இன்றோ, நாளையோ முடிவு!’ - ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பின் ஓ.பி.எஸ்

செய்தியாளர்களிடம் பேசும் ஓ.பன்னீர்செல்வம்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேபோல் அ.தி.மு.க - பா.ஜ.க கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது. மற்ற கட்சிகளை தங்களது கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தி.மு.க, அ.தி.மு.க-வினர் பேசிவருகின்றனர். விஜயகாந்தின் தே.மு.தி.க-வை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு இரண்டு கட்சிகளும் முயற்சி செய்துவருகின்றன. இரண்டு திராவிட கட்சிகளும் தன்னைத் தேடி வருவதால் தே.மு.தி.க இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்கிறார்கள். தே.மு.தி.க சில டிமாண்ட்கள் வைப்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

விஜயகாந்த் - ஓ.பி.எஸ் சந்திப்பு

இந்த நிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கிறார்கள்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ``விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் பூரண நலம்பெற்று ஆரோக்கியத்துடன் இருக்கிறார். எங்களிடம் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும் விஜயகாந்த் பேசினார். அவர் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று தெரிவித்தோம். அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை தே.மு.தி.க பணியாற்றுவது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று அல்லது நாளையோ ஒரு நல்ல முடிவு எட்டப்படும். அதைக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிவிப்போம். வரும் 6-ம் தேதிக்குள் கூட்டணி குறித்த அனைத்துக் கட்சிகளின் முடிவுகளும் உரிய முறையில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அந்த மேடையில் பங்கேற்பார்கள். பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உறுதியாக இருப்பார்’’ என்றார்.
 


[X] Close

[X] Close