8 நாள்களுக்குப் பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி! | Mudumalai tiger reserve re-opened after 8 days

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (04/03/2019)

கடைசி தொடர்பு:21:45 (04/03/2019)

8 நாள்களுக்குப் பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதால் கடந்த 8 நாள்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு  தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிலவிய கடும் உறைப்பனி பொழிவு காரணமாக முதுமலை வனப்பகுதி காய்ந்த நிலையில் கடும் வறட்சி நிலவுகிறது . இந்நிலையில் கடந்தமாதம் 23ம் தேதி பந்திப்பூர் வனத்தில் இருந்து முதுமலை உள் மண்டலத்திற்குட்பட்ட மூன்று மாநில எல்லையான டிரை ஜங்சன் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டது. இரு மாநில  வனத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

அதேபோல், கடந்த 24 ம் தேதி முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிக்குட்பட்ட மசினகுடி - தெப்பகாடு சாலையில் திடீர் காட்டு தீ ஏற்பட்டது. மேலும், மாயார், பொக்காபுரம், ஆச்சக்கரை, சிங்காரா, மாவனல்லா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. பல இடங்களில் ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 25 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமானதாகக் கூறப்பட்டது. பாதுகாப்பு கருதி முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. இரவு பகலாக போராடி வனத்துறையினர்  தீயை அணைத்தனர். தற்போது தீ பரவும் அபாயம் குறைந்துள்ள நிலையில் 8 நாள்களுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை  அனுமதி அளித்துள்ளது. 


[X] Close

[X] Close