சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு - தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் முதியவர் மரணம்! | 3 deaths in one family at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (04/03/2019)

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு - தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் முதியவர் மரணம்!

திருப்பூரைச் சேர்ந்த கோயில் அர்ச்சகரும், அவரது மனைவியும் சாலை விபத்தில் இறந்துபோன தகவலைக் கேட்டு, வீட்டில் இருந்த சித்தப்பா அதிர்ச்சியில் இறந்துபோன நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவானந்தம் - சுப்புலட்சுமி தம்பதியினர்

திருப்பூர் மாவட்டம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதியர் சிவானந்தம் - சுப்புலட்சுமி ஆகியோர். இதில் சிவானந்தம் திருப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த ஈஸ்வரன் கோயிலில் சிவாச்சாரியாராகப் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தம்பதியர் இருவரும் திருக்கடையூர் கோயிலுக்கு தரிசனம் சென்றுவிட்டு, நேற்றிரவு காரில் திருப்பூருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது இத்தம்பதியர் பயணித்த கார் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவாச்சாரியார் சிவானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். சம்பவம் குறித்து மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஸ்வநாத சிவாச்சாரியார்

சாலை விபத்தில் சிவானந்தமும், அவரது மனைவி சுப்புலட்சுமியும் இன்று அதிகாலை இறந்துபோன தகவல் அவர்களது வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலைக் கேட்ட சிவானந்தத்தின் சித்தப்பா விஸ்வநாத சிவாச்சாரியாரும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். ஏற்கெனவே வயோதிகம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அவர் வீட்டிலிருந்து வந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மகா சிவராத்திரி நாளான இன்று ஈஸ்வரன் கோயில் சிவாச்சாரியார் உயிரிழந்ததால், இன்றைய தினம் திருப்பூர் ஈஸ்வரன் கோயிலின் நடை மாலை 4 மணிவரை அடைக்கப்பட்டது. 


[X] Close

[X] Close