`கற்றல் குறைபாடுடையவர்களை அவமதிப்பதா?’ - மோடிக்கு எதிராகக் கொதிக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் | TN disabled persons rights organisation plans to hold protest against PM Modi over dyslexia remarks

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (05/03/2019)

கடைசி தொடர்பு:07:30 (05/03/2019)

`கற்றல் குறைபாடுடையவர்களை அவமதிப்பதா?’ - மோடிக்கு எதிராகக் கொதிக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்கம்

மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை அவமதிக்கும் வகையில் மோடி பேசியதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகத் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது . 

நம்புராஜன்

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன் பேசுகையில், ``கடந்த 2 -ம் தேதி ரூர்கேலாவில் உள்ள மத்திய அரசின் இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐஐடி) சார்பில் நடைபெற்ற ``ஸ்மார்ட் இந்திய ஹக்கத்தான்(-Smart India Hackathon) 2019” நிகழ்ச்சியையொட்டி, அந்நிறுவன மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.  டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்கள் குறித்து தமது நிறுவனத்தில் மேற்கொண்டுவரும் ஆய்வுப் படிப்பை விவரித்து அப்போது திக்ஷா ஹரியால் என்ற மாணவி பிரதமரிடம் விளக்கிக்கொண்டிருந்தார். மாணவி திக்ஷா ஹரியால் பேசிக்கொண்டிருந்தபோதே, இடைமறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``அப்படியென்றால் அது 40, 50 வயதுள்ளவர்களுக்கும் பயன்படும்தானே?” எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் கேலி செய்தார். அதேபோன்று, ``அவருடைய அம்மாவும் மகிழ்ச்சியாக இருப்பார் அல்லவா” எனச் சோனியா காந்தியின் பெயரையும் குறிப்பிடாமல் மோடி கேலி செய்தார். 

மாணவர்களுடனான கலந்துரையாடலில் மோடி

இந்தநிலையில், பிரதமர் மோடியைக் கண்டித்துப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன் பேசுகையில், ``டிஸ்லெக்சியா பாதித்தவர்கள் குறித்து மாணவி திக்ஷா ஹரியால் பேசியபோது, அதைக் கனிவோடு கவனித்து, அந்த ஆய்வை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, குறைபாட்டை இழிவுப்படுத்தி, அரசியல் நையாண்டியை அரசு நிகழ்ச்சியில் அப்பட்டமாக நாட்டின் பிரதமர், செய்துள்ளார் என்பது கண்டிக்கத்தக்கது. குறைபாடு உள்ளவர்களை அரசியல் நையாண்டிக்குப் பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த வெட்கக்கேடான செயலுக்கு நரேந்திர மோடி மன்னிப்பு கோர வேண்டும் என எமது சங்கம் கோருகிறது. இல்லையெனில் இந்தக் குறைபாட்டை உள்நோக்கத்தோடு பொதுவெளியில் கேலி செய்த குற்றத்திற்காக நரேந்திர மோடி மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப் பிரிவு 92(a)படி வழக்குகளைப் பதிவு செய்வோம் எனவும் எமது சங்கம் எச்சரிக்கிறது.

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியுள்ள பிரதமர் மோடியின் நையாண்டியைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கண்டனக் குரல்கள் எழுப்பிடவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்திடவும் எமது சங்கம் கோருகிறது.கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னையிலும், வாரணாசியிலும் பேசிய மோடி, அப்போதைய மன்மோகன்சிங் அரசைக் கேலி செய்யும் விதத்தில், அது ஒரு நொண்டி அரசு, செவிட்டு அரசு, குருட்டு அரசு என்றெல்லாம் பேசியதற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. தற்போதும் அதே மாதிரியாகக் கிண்டல் செய்து பேசியுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகச் சட்டரீதியாகியும் திட்டங்கள் வகையிலும் எந்த ஒரு நல்லதையும் அவர் செய்யவில்லை. அதையும் தாண்டி அவர்களை ஏமாற்றும் வகையில், ஊனமுற்றோர் என்ற பெயரை அதிகாரபூர்வமாகத் தெய்வப்பிறவிகள் எனத் தனது ஆட்சியில் பெயர் மாற்றம் செய்தார் மோடி. வெறும் வார்த்தைகளால் பெயர் மாற்றம் செய்து விட்டால் போதுமா?. அவை ஒரு அரசியல் கண்துடைப்பு நாடகம். அவர்களுக்கான நலனில் அக்கறை இருந்தால் இப்படிக் குறைபாடு உள்ளவர்களைக் கிண்டல் செய்வாரா மோடி?'' என்றார் காட்டமாக.


 


[X] Close

[X] Close