`இப்படியெல்லாம் மரங்கள் இருக்கா?’ -மாணவர்களை ஆச்சர்யப்படுத்திய விழிப்புணர்வு கண்காட்சி | Trees Awareness Exhibition that surprises students

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (05/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (05/03/2019)

`இப்படியெல்லாம் மரங்கள் இருக்கா?’ -மாணவர்களை ஆச்சர்யப்படுத்திய விழிப்புணர்வு கண்காட்சி

இன்றைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் ஒரு சில மரங்களைப் பற்றி மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முன்பு வழக்கத்திலிருந்த விதவிதமான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றைப் பார்ப்பது இன்று மிகவும் அரிதாகிவிட்டது. இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள லக்குமிவிலாஸ் நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட அரிய வகை மரங்களின் விழிப்புணர்வு கண்காட்சி, மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீடாமங்கலத்தில் செயல்பட்டுவரும் 'கிரீன் நீடா' அமைப்பினர் இக்கண்காட்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.

மரங்கள் கண்காட்சி

இக்கண்காட்சியை ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் குணசேகரன்  தொடங்கிவைத்தார். மகோகனி, ஈட்டி, செஞ்சந்தனம், வேங்கை, கருமுத்து, நீர் மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு, இலுப்பை, மகிழம் மற்றும் பூ மரங்கள், தல விருட்ச மரங்கள், பழ மரங்கள், நிழல் மரங்கள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கண்காட்சியைப் பார்த்துச்சென்றனர். புங்கன் மரம், புளிய மரம், மா மரம், வேப்ப மரம் மட்டும்தான் மரம்  என நினைச்சிக்கிட்டு இருந்தோம். இங்க, நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களைப் பார்த்ததும் ஆச்சர்யமாக இருக்கு. இந்த மரங்களை எங்களோட வீட்டில் வளர்க்கணும்னு ஆசையா இருக்கு. இந்த மரங்களின் மருத்துவ குணங்கள் ஆச்சர்யப்பட வைக்குது” என மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பேசினார்கள்.

இக்கண்காட்சிக்கு ஏற்பாடுசெய்த கிரீன்நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, ‘’மரங்கள் வளர்ப்பு மட்டும் எங்கள் நோக்கமல்ல. அழிந்துபோன நம்முடைய பாரம்பர்ய மரங்களை மீட்கணுங்கறதும் எங்களோட முதன்மையான நோக்கம். இப்படியெல்லாம் மரங்கள் இருக்காணு மாணவர்கள் மட்டுமல்ல, பெரியவங்களும் ஆச்சர்யப்படுறாங்க. இவங்க எல்லாருக்குமே இதுல ஆர்வம் ஏற்பட்டிருக்கு. இந்த மரங்களை வளர்க்க முனைப்புக் காட்டுவாங்கன்னு உறுதியா நம்புறோம்” என்று தெரிவித்தார்.   

 


[X] Close

[X] Close