ராமேஸ்வரத்தில் மாசி மகா சிவராத்திரி -கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டத் திருவிழா | In Rameshwaram Temple Massi Maha Shivarathri car festival happened

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:12:20 (05/03/2019)

ராமேஸ்வரத்தில் மாசி மகா சிவராத்திரி -கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டத் திருவிழா

மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி - அம்பாள் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.

 ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி தேரோட்டம். 
 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.  இதைத் தொடர்ந்து, சுவாமி - அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது.

  மகா சிவராத்திரி தினமான நேற்று காலை, அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், அதைத் தொடர்ந்து பட்டயம் வாசித்தல் வைபவமும் நடந்தன. இதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான சிவபக்தர்கள் ராமநாதசுவாமி கோயிலில் விடிய விடிய சிறப்பு தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்றிரவு சுவாமி - அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி - அம்பாள் திருத் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். இதைத் தொடர்ந்து, கோயிலின் நான்கு ரத வீதிகளில் திருத்தேர் பவனி வந்து நிலையை அடைந்தது. அங்கு, சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில், மேலத் தெருவில் உள்ள மண்டகப்படிக்கு சுவாமி - அம்பாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.
 

10-ம் நாள் திருநாளான மாசி மகா அமாவாசை தினத்தில், நாளை பகல் 1.31 மணிக்கு சுவாமி - அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னிதீர்த்தத்துக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி வழங்குவார்கள்.


[X] Close

[X] Close