`தினமும் 200 ரூபாய் கட்டணம், பஸ் பாஸ் வாங்கித்தாங்க!' - கலெக்டரிடம் முறையிட்ட மாணவர்கள் | Ooty goverment arts college students bus pass issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (05/03/2019)

கடைசி தொடர்பு:13:05 (05/03/2019)

`தினமும் 200 ரூபாய் கட்டணம், பஸ் பாஸ் வாங்கித்தாங்க!' - கலெக்டரிடம் முறையிட்ட மாணவர்கள்

'கல்லூரிக்குச் செல்ல நாள்தோறும் ரூ.200 வேண்டும்' என அரசுக் கல்லூரி மாணவர்கள், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம்  மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கூடலூரில் அரசு கலைக் கல்லுாரிகள் உள்ளன. கூடலூரில் உள்ள கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி என்பதால், அங்கு விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட துறைகள் இல்லை. இத்துறைகள், ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் உள்ள நிலையில், பெரும்பாலான மாணவ மாணவிகள் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் பயிலவேண்டிய நிலை ஏற்படுகிறது.

நீலகிரி மாவட்ட  கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் மாணவர்கள்

மாணவர்கள்  அனைவருக்கும் கல்லூரி விடுதி கிடைப்பதில்லை என்பதால், பெரும்பாலான மாணவ மாணவிகள் நாள்தோறும் 100 கிலோ மீட்டர் பயணித்து,  ஊட்டி கல்லூரிக்கு வந்துசெல்கின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டை இருந்தாலே கட்டணம் கேட்கக் கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில்,  கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, கல்லுாரி படிப்பிற்காக ஊட்டிக்கு வந்துசெல்லும் பெரும்பாலான மாணவர்களுக்கு, அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் இலவச பஸ் பாஸ் வாங்கிக் கொடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், இந்த மாணவர்கள் நாள்தோறும் பேருந்துக்கு கட்டணம் செலுத்தியே வந்துசெல்கின்றனர். ஊட்டியில் இருந்து கூடலூருக்கு 51 ரூபாய் கட்டணமும், அங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மாணவ மாணவிகள், ரூ.50 வரை கட்டணம் செலுத்தியே செல்வதால்,  தினமும் ரூ.200 வரை செலவுசெய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நீலகிரி மாவட்ட  கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளிக்கும் மாணவர்கள்

பெரும்பாலும், முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் சென்று பயிலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளே கல்லூரிக்காக ஊட்டி வந்துசெல்கின்றனர். இவர்கள், நாள் ஒன்றுக்கு ரூ.200 கொடுத்து வருவது என்பது சாத்தியமில்லை. அரசின் இலவச பஸ் பாஸ் தங்களுக்கு வழக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து பஸ்களிலும் மாணவர்களை ஏற்றி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட  கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர். 

மனுவை வாங்கிக்கொண்ட கலெக்டர், ``புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை பழைய பஸ் பாஸ் அல்லது கல்லூரி அடையாள அட்டையைக் காண்பித்து, அரசுப் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்குமாறு, ஊட்டி மற்றும் கூடலூர் போக்குவரத்து அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்படும்'' என உறுதியளித்தார்.

 


[X] Close

[X] Close