தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்கப்படுமா?- எதிர்பார்ப்பில் கும்பகோணம் மக்கள் | Will PM Modi start news train service

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (05/03/2019)

கடைசி தொடர்பு:13:50 (05/03/2019)

தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்கப்படுமா?- எதிர்பார்ப்பில் கும்பகோணம் மக்கள்

தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு, அந்தியோத்யா ரயில் இயக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரயில்வே அறிவித்தது. ஆனால்,  அது இயக்கப்படாமலே இருக்கிறது. முற்றிலும் முன்பதிவு இல்லாத இந்த ரயில், ஏழைகளின் ரதம் என அழைக்கப்படுகிறது. மார்ச் 6-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, இந்த ரயிலின் ஓட்டத்தைத் தொடங்கிவைக்க வேண்டும் என கும்பகோணம் மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

அந்தியோத்யா ரயில்

இந்த ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என தாம்பரம் - செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். குறிப்பாக, கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் இருப்பதாலும், இங்கு பல்வேறு தொழில்கள் மற்றும் வணிகம் நடைபெற்றுவருவதாலும், இப்பகுதி மக்கள் தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா ரயிலை எதிர்பார்க்கிறார்கள்.

கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயணன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கும்பகோணம் அனைத்து தொழில், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயணன், ‘’அந்தியோத்யா ரயிலில் அனைத்துப் பெட்டிகளுமே முன்பதிவு இல்லாதது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் இதில் பயணம் செய்யலாம். இதில், 1500 பேர் பயணிக்கலாம். தாம்பரம் - திருநெல்வேலிக்கும், தாம்பரம்- செங்கோட்டைக்கும் இரண்டு அந்தியோத்யா விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே கால அட்டவணையில் வெளியிட்டாங்க. ஆனால், இந்த இரண்டு ரயில்களையுமே பல மாதங்களாக இயக்கவில்லை. ஆம்னி பஸ் உரிமையாளர்களின் சுயநலத்தாலும், சூழ்ச்சியாலும் காலதாமதமாகிக்கிட்டே இருந்துச்சு. தொடர் போராட்டங்கள் நடத்திய பிறகு, தாம்பரம் - திருநெல்வேலி ரயிலை இயக்கினாங்க. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தனது செல்வாக்கை பயன்படுத்தி, தாம்பரம் - திருநெல்வேலி ரயிலைத் தனது சொந்தத் தொகுதியான நாகர்கோவில் வரை நீட்டிக்க வெச்சார்.

அதை நாங்க குறை சொல்லலை. அதில் அக்கறைகாட்டிய அவர், தாம்பரம் - செங்கோட்டை ரயில் இதுவரை இயக்கப்படாமல் இருக்கிறதைப் பத்தி கொஞ்சம்கூட கண்டுக்கலை. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இதையும் அவர் இயக்க வெச்சிருக்கணும். ஆண்டுக்கு ஒரு முறை இந்திய ரயில்வே வெளியிடக்கூடிய கால அட்டவணை என்பது, ரயில்வே துறையின் அரசிதழ் மாதிரி. அதில் வெளியிடப்பட்டால், கண்டிப்பாக நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால், தாம்பரம் - செங்கோட்டை ரயில் குறித்து இரண்டு முறை அறிவிப்பு வெளியிடப்பட்டும். இதுவரை இயக்கப்படலை. கோடை விடுமுறை நெருங்கிக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துலயாவது இதை இயக்கினால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும். அந்தியோதயா ரயிலுக்கான தேவை அதிகமாக இருக்கு. ஏற்கெனவே ஓடிக்கிட்டு இருக்குற தாம்பரம் - நாகர்கோவில் ரயில்ல பொங்கல் சமயத்துல மட்டுமே 80 ஆயிரம் பேருக்கு மேல் பயணம் செஞ்சிருக்காங்க. இன்னொரு ரயில் இயக்கப்பட்டால்தான் நெருக்கடி குறையும். வசதிப்படைத்தவர்களுக்கான அதிநவீன சொகுசு ரயிலான தேஜஸ் ரயிலை கடந்த 1-ம் தேதி கன்னாகுமரியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பணக்காரங்க மேல காட்டும் அக்கறையயில் துளி அளவாவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மேல காட்டினால் நல்லா இருக்கும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா ரயிலை இயக்கிவைக்கணும்” என்றார்.  


[X] Close

[X] Close