செல்லப்பாண்டியனின் பதவி பறிப்புக்கு என்ன காரணம்?- ஜெயலலிதா சென்டிமென்ட்டைப் பின்பற்றிய எடப்பாடி | Reason behind the action against chellapandian in party

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (05/03/2019)

கடைசி தொடர்பு:14:47 (05/03/2019)

செல்லப்பாண்டியனின் பதவி பறிப்புக்கு என்ன காரணம்?- ஜெயலலிதா சென்டிமென்ட்டைப் பின்பற்றிய எடப்பாடி

ஜெயலலிதா சென்ட்மென்ட்டை பின்பற்றி மாமவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செல்லப்பாண்டியன்

ஜெயலலிதா சென்டிமென்ட்டைப் பின்பற்றி அ.தி.மு.க.வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியனின் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் சிலர் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சி.த.செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்களோ, அண்ணை எம்.பி. வேட்பாளராக நிறுத்தவே அவரின் பதவி பறிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். 

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கடந்த 1-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதோடு கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் எனச்  செயல்பட்டுவரும் மாவட்ட கழக அமைப்பு இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என இரண்டு மாவட்ட கழகங்களாகப் பிரிக்கப்படுகின்றன. 

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் (தனி) கோவில்பட்டி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளடக்கி செயல்படும்.  

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் கடம்பூர். செ.ராஜூம், தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.வும் இன்று முதல் நியமிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சி.த.செல்லப்பாண்டியன் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

 ஜெயலலிதா பாணியில் சண்முகநாதனுக்குப் பதவி

இதுகுறித்து தூத்துக்குடி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ``தூத்துக்குடி எம்.பி தொகுதியைக் கருத்தில் கொண்டுதான் இரண்டு பேருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனின் மீது ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே கார்டனுக்குச் சில புகார்கள் சென்றன. குறிப்பாக அவரின் மகனின் வீடியோ குறித்த தகவலையறிந்த ஜெயலலிதா கோபமடைந்தார். அதனால் செல்லப்பாண்டியனின் அமைச்சர் பதவி அப்போது பறிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி களமிறங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கனிமொழிக்கு நிகராக ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது. மேலும், தூத்துக்குடியில் கனிமொழி நிறுத்தப்பட்டால் அதற்கேற்ப தேர்தல் வியூகம் அமைக்கப்பட வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மாவட்டச் செயலாளரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்தால் மட்டுமே தூத்துக்கு நாடாளுமன்றத் தேர்தலில் அவரின் ஆதரவாளர்கள் வேலை பார்ப்பார்கள். அதைக்கருத்தில் கொண்டுதான் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் தேர்தலை காரணமாக வைத்துதான் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தவர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன். அதன்பிறகு சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்தனர். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தவர்களுக்குக் கட்சியில் எந்தவித முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவியை குறி வைத்து சண்முகநாதன் தரப்பினர் காயை நகர்த்திவந்தனர். அதுபோல அமைச்சர் கடம்பூர் ராஜூம் மாவட்டச் செயலாளர் பதவியை கட்சி தலைமையிடம் கேட்டுவந்தார். 

 அமைச்சர் கடம்பூர் ராஜூ

தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுப்பதை சென்டிமென்டாக வைத்திருந்தார். அதே பாணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். மேலும், மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டதன் பின்னணியில் சிலர் உள்ளனர். அவர்கள்தான் சி.த.செல்லப்பாண்டியனின் பதவியைப் பறிக்க காரணமாக இருந்தனர். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை பிரித்து மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதற்குப் பின்னால் அ.தி.மு.க.வை வெற்றியின் ரகசியம் மறைந்துள்ளது" என்றனர். 

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்கள் கூறுகையில், ``தி.மு.க. கூட்டணியில் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி வேட்பாளராக சி.த.செல்லப்பாண்டியனை நிறுத்தத்தான் அவரின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது" என்றனர். 

அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில்,``தூத்துக்குடியில் கனிமொழி நிறுத்தப்பட்டால் அந்தத் தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளோம்" என்றார். 


[X] Close

[X] Close