`எங்க கனவையாவது நிறைவேத்துங்க அங்கிள்!'- நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்த சிறுவர்கள் | kids gives complaint to kulithalai municipality commissioner demand new bus stand in the city

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:15:20 (05/03/2019)

`எங்க கனவையாவது நிறைவேத்துங்க அங்கிள்!'- நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்த சிறுவர்கள்

குளித்தலை நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் சிறுவர்கள்

"எங்க தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா காலத்துல அவங்க குளித்தலையில் புது பஸ்ஸ்டாண்டை பார்க்க முடியலை. அவர்களின் அந்த கனவு நிறைவேறலை. அதனால், எங்க காலத்துலயாவது நாங்க பேருந்துநிலையத்தை பார்த்துபுடனும். எங்க கனவையாச்சும் நிறைவேத்துங்க" என்று சிறுவர்கள் குளித்தலை நகராட்சி கமிஷனிரிடம் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை தற்போதைய பேருந்து நிலையம்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் முறையாக எம்.எல்.ஏவாக்கிய தொகுதியும்கூட. இப்போது, குளித்தலை தொகுதியில் தி.மு.கவைச் சேர்ந்த ராமர்தான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். "தி.மு.க தொகுதி என்பதால், கரூர் பகுதிக்கு அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெரிய அளவில் திட்டங்களை செயல்படுத்துவதில்லை" என்று புழுங்கி வருகிறார். இதற்கிடையில்,கு ளித்தலை நகராட்சியில் அங்குள்ள ஒரு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சிறிய அளவில் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. சேர்ந்த மாதிரி நான்கு பேருந்துகள்கூட நிற்கமுடியாது. அந்த அளவிற்கு சிறிய பேருந்துநிலையம் அது. திருச்சி டு கரூர் மார்க்கத்தில் குளித்தலை இருப்பதால், சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகள் நகர்ந்துவிடும். இதனால், கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, 'குளித்தலை நகராட்சிக்கு புதிய பேருந்துநிலையம் வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மனுவோடு சிறுவர்கள்

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோதுகூட இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புதிய பேருந்துநிலையம அமைக்க திட்டம் அறிவிக்கப்பட்டு, பூமி பூஜையெல்லாம் போடப்பட்டது. என்ன காரணமோ, பணிகள் தொடங்கப்படாமலேயே அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. கரூரில் நடைபெற்ற அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'குளித்தலையில் புதிய பேருந்து நிலையம அமைக்கப்படும்' என்று அறிவித்தார். அதுவும் கிடப்பில் இருக்கிறது.

இந்நிலையில்தான், குளித்தலையை சேர்ந்த மக்கள், தாங்கள் போராடி போராடி அலுத்துப் போய், சிறுவர்களையும், சிறுமிகளையும் வைத்து குளித்தலை நகராட்சி கமிஷனிடம் மனு கொடுக்க வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள் மனு கொண்டு வந்திருப்பதை பார்த்து கமிஷனர் மிரண்டு போனாலும், "மனு கொடுக்கிற வயசு வந்துவிட்டதா உங்களுக்கு" என்றபடி அவர்களை அமர வைத்தார். அவர்களுக்கு பிஸ்கட், டீ எல்லாம் கொடுத்து உபசரித்தவர், மனுவை வாங்கி கொண்டு, "உங்க மனுவை மேலிடத்திற்கு அனுப்புறேன்" என்ற வழக்கமான பதிலோடு அவர்களை வழியனுப்பி வைத்தார்.

குளித்தலை ஆணையர் அலுவலகத்தில் சிறுவர்கள்

அந்த சிறுவர்கள் கொடுத்த மனுவில்,  'அன்புள்ளம் கொண்ட குளித்தலை நகராட்சி ஆணையர் அவர்களுக்கு, குளித்தலைப் பகுதி பள்ளிக்குழந்தைகள் எழுதும் அன்பு மடல். எங்கள் தாத்தா...பாட்டி...அம்மா...அப்பா காலம் முதல் இன்னைக்கு வரையும் எங்க கனவு குளித்தலையில் நிரந்தர புத்தம் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதுதான். அவுங்க கனவு நடக்கல அங்கிள். அதனாலதான் அங்கிள், நாங்கள் மனுகொடுக்க வந்திருக்கோம். எங்க கனவையாவது நிறைவேற்றுங்க அங்கிள். நம்ம பக்கத்து ஊரு முசிறி பேரூராட்சியில் ரொம்ப அழகா பேருந்துநிலையம் இருக்குது. அவ்வளவு ஏன் அங்கிள், நம்ம குளித்தலை தொகுதியில் உள்ள தோகைமலை ஒன்றியத்தில்கூட சிறியதா அழகா பேருந்துநிலையம் இருக்கு. நம்ம நகராட்சியில் மட்டும் ஏன் அங்கிள் வசதியான பேருந்து நிலையம் இல்லை. தயவுசெய்து நாளைக்கு எங்க குழந்தைகளையும் மனு தரவச்சுராதீங்க அங்கிள் ப்ளீஸ்...ப்ளீஸ்...' என்று எழுதி இருந்தது. பேருந்து நிலையம் கேட்டு ஆணையரிடம் சிறுவர்கள் மனு கொடுத்த விவகாரம் குளித்தலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


[X] Close

[X] Close