`கவலைப்படாதீங்க... இன்றுக்குள் முடிந்துவிடும்!'- நிர்வாகிகளை குஷிபடுத்திய விஜயகாந்த்  | Vijayakanth talks to his party members in party office

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (05/03/2019)

கடைசி தொடர்பு:11:22 (16/03/2019)

`கவலைப்படாதீங்க... இன்றுக்குள் முடிந்துவிடும்!'- நிர்வாகிகளை குஷிபடுத்திய விஜயகாந்த் 

விஜயகாந்த்


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா என்ற கேள்விக்கு கோயம்பேடு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பதிலளித்துள்ளார். கூட்டத்தில் அவர், `இன்றுக்குள் எல்லாம் முடிந்துவிடும்' என்று பேசியுள்ளார். 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வின் தலைமையும் தி.மு.க.வின் தலைமையும் பிஸியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன. தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் இழுக்க தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பலவகையில் முயற்சி செய்தன. 

வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த்தை திருநாவுக்கரசர், ஸ்டாலின், ரஜினி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், சரத்குமார் ஆகியோர் சந்தித்தனர். கூட்டணி குறித்து தே.மு.தி.க. வெளிப்படையாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் மதில் மேல் பூனை என்ற நிலை நீடித்தது. இந்தநிலையில் பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினர். அதன்பிறகு தே.மு.தி.க, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதி என்ற தகவல் வெளியாகின. 

 விஜயகாந்த்

இந்தநிலையில் கூட்டணி குறித்த ஆலோசனைக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் பேசிய விஜயகாந்த், ``கூட்டணி குறித்து யாரும் கவலைப்படாதீங்க, கண்ணியமான தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்டுள்ளோம். அதுகுறித்து நல்ல முடிவை எடுப்பதாக அ.தி.மு.க. தலைமை கூறியுள்ளது. இதனால் இன்றுக்குள் எல்லாம் முடிந்துவிடும். தேர்தல் வேலைகளில் ஈடுபடுங்கள்'' என்று கூறியுள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜயகாந்த்தின் பேச்சைக் கேட்ட நிர்வாகிகள் கேப்டன் வாழ்க என்று உற்சாகத்தில் கோஷமிட்டனர். அதோடு விஜயகாந்த்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர். 

விஜயகாந்த் பேசி முடித்ததும் நிர்வாகிகள் கைதட்டினர். இதையடுத்து மேடையை விட்டு அவர் இறங்கிச் சென்றார். கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியான தகவலை ஒவ்வொரு நிர்வாகியும் தங்களது மாவட்ட நிர்வாகிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைமையிலிருந்து அ.தி.மு.க.வுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இதனால் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் அருகே மேடையில் அமர உள்ளனர். 

விஜயகாந்த்தின் பேச்சை பிரேமலதா விஜயகாந்த்தும், சுதீஷ் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர். வெளிநாட்டு சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த்தின் பேச்சு சிறப்பாக இருந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 


[X] Close

[X] Close