`டெல்லி உத்தரவை அப்படியே அமல்படுத்துகிறார்கள்!’ - உள்ளிருப்புப் போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் | revenue department officials staged protest against transfer

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (05/03/2019)

கடைசி தொடர்பு:16:50 (05/03/2019)

`டெல்லி உத்தரவை அப்படியே அமல்படுத்துகிறார்கள்!’ - உள்ளிருப்புப் போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள்

வட்டார வளர்ச்சி அலுவலர்களின் இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

மக்களவைத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு 6 பேர், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 17 பேர் என மொத்தம் 23 வட்டார வளர்ச்சி அலுவலர்களும், 9 வட்டாட்சியர்களும் வேறு மாவட்டத்துக்குப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்தப் பணியிட மாற்றத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிப் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் இன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறும்போது, ``வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதுவரை நடந்த தேர்தல்களின்போது ஒரே மாவட்டத்துக்குள்ளேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போது ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்பு இருந்த அதிகாரிகள் எல்லாம் தமிழக நிலை குறித்து எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், தற்போது டெல்லியிலிருந்து வரும் உத்தரவை அப்படியே அமல்படுத்துகின்றனர். தேர்தலுக்காகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் இங்கே மாற்றம் செய்யப்படுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது’’ எனத் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close