`தமிழகத்தில் இந்த 2 தொகுதிகளில் போட்டியிடுங்கள்’- மோடி, அமித் ஷாவுக்கு அர்ஜுன் சம்பத் அழைப்பு | modi, amit shah should contest in tamilnadu, says arjun sampth

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (05/03/2019)

கடைசி தொடர்பு:11:23 (16/03/2019)

`தமிழகத்தில் இந்த 2 தொகுதிகளில் போட்டியிடுங்கள்’- மோடி, அமித் ஷாவுக்கு அர்ஜுன் சம்பத் அழைப்பு

நாடாளுமன்றத் தேர்தலின்போது ராமநாதபுரத்தில் மோடியும் கோவையில் அமித் ஷாவும் போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் விருப்பம் தெரிவித்தார்.

அர்ஜுன் சம்பத்

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்துக்குள் ராகுல்காந்தி, சோனியா, பிரியங்கா காந்தி ஆகியோர் வரும்போது கறுப்புக்கொடி காட்டுவோம். வரும் 13-ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வருக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பாக கறுப்புக்கொடி காட்டப்படும். 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். அதற்காகத் தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., இடம்பெற்றுள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. இது தமிழகத்தின் நலன் காக்கும் கூட்டணியாக விளங்குகிறது. தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணி மக்களுக்கு எதிரான கூட்டணி.

தேர்தல் காலங்களில் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மத உத்தரவாகப் பிறப்பிக்கும் நிலைமை இருக்கிறது. இதைத் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் வழிபாட்டு தலங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளுடன் அ.தி.மு.க அல்லது பா.ஜ.க கூட்டணி அமைத்துத் தேர்தலில் சீட் கொடுக்கக் கூடாது. அதை மீறி சீட் கொடுத்தால் அவர்களுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி பிரசாரம் செய்யும். 

அர்ஜுன் சம்பத்

தமிழகத்தைத் தேசிய நீரோட்டத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் நரேந்திரமோடி ராமநாதபுரம் தொகுதியிலும், பா.ஜ.க தலைவரான அமித் ஷா கோவை தொகுதியிலும் போட்டியிட முன்வர வேண்டும் என அழைக்கிறேன். அதன் மூலமாக பிரதமரைத் தேர்வு செய்த மாநிலமாகத் தமிழகம் மாறக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும். அதனால் அவர்கள் தமிழகத்தில் போட்டியிட முன்வர வேண்டும் என விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.


[X] Close

[X] Close