வசூல்வேட்டை நடத்திய வீ.ஏ.ஓ! - வீடியோ எடுத்து சிக்கவைத்த திருப்பூர் விவசாயிகள் | Government officer caught while taking bribe at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (05/03/2019)

கடைசி தொடர்பு:19:45 (05/03/2019)

வசூல்வேட்டை நடத்திய வீ.ஏ.ஓ! - வீடியோ எடுத்து சிக்கவைத்த திருப்பூர் விவசாயிகள்

விஏஓ

திருப்பூர் அருகே பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்களை அளிக்க வந்த விவசாயிகளிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கும் வகையில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ என்ற திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2,000 வீதம், மொத்தம் 3 தவணைகளாக ரூ. 6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படும். நாடு முழுவதும் சுமார் 12 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தால்
பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்தத் திட்டத்துக்காக 75,000 கோடி ரூபாய் அளவுக்கு, தொகை செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் இத்திட்டத்தின் கீழ் விவசாய உதவித்தொகை பெறுவதற்காக, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கூனம்பட்டிப் பகுதி விவசாயிகள், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியிருக்கிறார்கள். அங்கு கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் நடராஜன் என்பவரிடம் அதற்கான விண்ணப்பங்களை விவசாயிகள் அளித்தபோது, அவர் விவசாயிகளிடம் தன்னுடைய விருப்பத்துக்கேற்ப லஞ்ச பணத்தைக் கறாராகக் கேட்டு வசூலித்திருக்கிறார். இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகளில் ஒருவர், கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்குவதை வீடியோவாகப் பதிவு செய்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த வீடியோவானது தொடர்ந்து விவசாயிகள் வட்டாரத்தில் பகிரப்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதையடுத்து, அதிகாரிகளை விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


[X] Close

[X] Close