`நீங்கள் மீனவர்களைச் சாகடிக்கக்கூடியவர்கள்!’ - ஆவேசமான பொன்னார் | Kaniyakumari port - pon. radhakrishnan slams protesters

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (05/03/2019)

`நீங்கள் மீனவர்களைச் சாகடிக்கக்கூடியவர்கள்!’ - ஆவேசமான பொன்னார்

`வர்த்தகத் துறைமுகத்துடன் சேர்த்து மீன்பிடி துறைமுகமும் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீன் பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இனியும் இந்தத் துறைமுகம் வேண்டாம் எனக் கூறுபவர்கள் மீனவர்களைச் சாகடிக்கக்கூடியவர்கள்’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி துறைமுக நிறுவனம் (KKPL) தொடக்க விழா நாகர்கோவிலில் இன்று நடந்தது. இதில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியா ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் வாழ்த்திப் பேசினர். துறைமுக கம்பெனியைத் தொடங்கிவைத்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``கன்னியாகுமரி மாவட்ட மக்களின் 60 ஆண்டுக்கால கனவான வர்த்தகத் துறைமுகத்தை அமைக்க முடிவு எடுத்து இன்று செயல்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. கனவு கான்பேன் அது கனவாகவே இருக்கட்டும் என அதை நனவாக்க எந்த முயற்சியும் எடுக்காதவன் மனிதனே அல்ல என பாரதியார் கூறுகிறார். குமரி மாவட்ட மக்கள் 60 ஆண்டுகள் கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி 28,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

துறைமுக கம்பெனி தொடக்கம்

 

நான் வெற்றிபெற்று சென்றதும் துறை அமைச்சர் நிதின்கட்கரி என்ன வேண்டும் எனக் கேட்டார். குமரி மாவட்டத்துக்குட் துறைமுகம் அமைக்க வேண்டும் எனக் கேட்டேன். மறு பேச்சு பேசாமல் துறைமுகம் அமையும் என்று கூறினார். துறைமுகத்துக்காக ஐந்து ஆண்டுகள் நான் போராடியிருக்கிறேன். துறைமுகத்துக்காக 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனயத்தில் துறைமுகத்தை நான் கொண்டுபோகவில்லை. ஆய்வு செய்தவர்கள் அங்கு கொண்டுச் சென்றார்கள். போராட்டம் நடத்தியவர்கள் இனயத்தில் துறைமுகம் வேண்டாம் என்றதால், மீண்டும் ஆய்வு  நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் அமைப்பதென இடம் தேர்வு செய்யப்பட்டது. துறைமுகத்துக்கான முழு ஆய்வு அறிக்கை 2018 ஆகஸ்ட் 17-ம் தேதி தயாரிக்கப்பட்டுவிட்டது. துறைமுக கம்பெனி தொடங்கப்பட்டுவிட்டது, இனி துறைமுகத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். துறைமுகம் வேண்டாம் என்பது மீனவர் சமுதாயத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். துறைமுகம் அமையும்போது ஒரு வீடுகூட போகாது. அந்த அளவுக்கு முழு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

 

துறைமுகம்

துறைமுகத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனப் பொய்யான தகவலைப் பரப்பிவருகிறார்கள். மீனவர்கள் பிடித்த மீன்களை ஏற்றுமதி செய்ய உரிமம் பெற்றுக்கொடுப்பது என்னுடைய கடமை. மீன்பிடிக்க கஷ்டமாக இருக்கும் என்பதால் மீன்பிடித்துறைமுகம் வேண்டும் எனக் கேட்டார்கள். நான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசி வர்த்தகத் துறைமுகத்துடன் சேர்த்து மீன்பிடி துறைமுகமும் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீன் பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இனியும் இந்தத் துறைமுகம் வேண்டாம் எனக் கூறுபவர்கள் மீனவர்களைச் சாகடிக்கக்கூடியவர்கள். நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்றுமதியாளர்களாக மாற வேண்டும். இனி யார் தலைகீழாக நின்றாலும் துறைமுகத் திட்டத்தை நிறுத்த முடியாது’’ என்றார்.


[X] Close

[X] Close