ரூ.2,000 வழங்கும் பணியில் காசநோய்த் தொழிலாளர்கள்! தமிழக அரசு பரபரப்பது ஏன்? | social equality doctors association press meet roundup

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (05/03/2019)

கடைசி தொடர்பு:21:59 (05/03/2019)

ரூ.2,000 வழங்கும் பணியில் காசநோய்த் தொழிலாளர்கள்! தமிழக அரசு பரபரப்பது ஏன்?

தமிழக சுகாதாரத்துறையின் மீது பல்வேறு புகார்களும் குவிந்து வரும் நிலையில், தற்போது தேர்தல் ஆதாயத்துக்காக, தமிழக அரசின் சார்பில் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்துக்கு, காசநோய் ஒழிப்பு தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் காசநோய் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசும், மாநிலஅரசும் இணைந்து செயல்பட்டுவருகின்றன. தற்போது காசநோய் ஒழிப்பு மற்றும் ஹெச்.ஐ.வி ஒழிப்பு போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதற்கு மாற்றாக, அவுட் சோர்சிங் அடிப்படையில் தனியார் நிறுவனங்களை மருத்துவத்துறையில் நுழைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

அரசு மருத்துவமனை

இதற்கான செய்தியாளர் சந்திப்பு, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறைப் பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாடு காசநோய் ஒழிப்பு தொழிலாளர் சங்கப் பொருளாளர் ஆனந்தன், ``இந்திய அரசு 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை வகுத்துள்ளது. ஆனால், இப்போது தொழிலாளர்கள் 2012-17 ம் ஆண்டு வரைக்காக வகுக்கப்பட்ட திட்டத்தைத்தான் செயல்படுத்தி வருகின்றனர். கடந்த 2017-க்குப் பிறகு காசநோய் ஒழிப்பிற்குப் புதிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை. தற்போது ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டதன் அடிப்படையில்தான் தற்போதுவரை ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. நீண்ட நாள்களாக ஒரே நபருக்குத் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டால் அவர்கள் நிரந்தரப் பணிகள் கேட்டு கோரிக்கை வைப்பார்கள் என்ற காரணத்திற்காக 11 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் இதை வாழ்வாகக் கொண்டுள்ள ஊழியர்கள்தாம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காச நோய் ஒழிப்பு திட்டத்தை தனியாரின் கைகளுக்கு வழங்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்படப்போவது பொது மக்கள்தான்” என்றார்.

மருத்துவ பரிசோதனைக் கூடம் - காசநோய்

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், ``தேசிய சுகாதார இயக்கத்தின் சார்பில் காசநோய் ஒழிப்பு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக நாடு முழுவதும் 72,000 க்கும் அதிகமான பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திலிருந்து மட்டும் 1500-க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது, பி.ஜே.பி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஆண்டொன்றுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், வேலை வாய்ப்பின்மை கடந்த 20 ஆண்டுகளில் தற்போதுதான் மோசமான நிலையில் உள்ளது. மோடி நினைத்திருந்தால் குறைந்தபட்சம் இந்த 72,000 பேருக்காவது பணியை உறுதி செய்திருக்கலாம். ஆனால், மருத்துவத்துறையை தனியார் மயமாக்கும் நோக்கில் இதைச் செய்ய மறுக்கின்றனர்.

மருத்துவர் ரவீந்திரநாத்

அதேபோல், காச நோய் ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் இந்தத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தையும் மிகக் குறைவாகவே வழங்குகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10,000 - 20,000 வரைதான் ஊதியமாக வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் காசநோய் மற்றும் ஹெச்.ஐ.வி போன்றவற்றை ஒழிக்கும் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியையும் குறைத்து வழங்குகின்றன. உடனடியாக ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சில இடங்களில் காச நோய் ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ள ரூ.2,000 வழங்கும் திட்டத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் செயல்பட்டு வந்த இரத்த சோதனை நிலையங்களை எல்லாம் வட்டார அளவில் மட்டும் செயல்படக் கூடியதாக மாற்றிவிட்டனர். அதேபோல் இரத்த பரிசோதனை நிலையங்களைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நோக்கில், வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத விதமாக, நகர்ப்புறங்களில் செயல்படும் இரத்த பரிசோதனை நிலையங்கள் குறைந்தபட்சம் 800 சதுர அடியும், கிராமப்புறங்களில் உள்ள கடைகள் 500 சதுர அடியும் கொண்டதாக அமைய வேண்டும் எனத் தமிழக அரசின் சார்பில் வரையறுத்துள்ளது. இது ரத்தப் பரிசோதனை தொழிலைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகும். இதனால் 20,000 க்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வை இழக்கும் நிலையில் உள்ளனர். ஆகையால், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன், 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கிவிட வேண்டுமென்ற ஒரே நோக்கிலேயே, காசநோய் ஒழிப்புத் தொழிலாளர்களை இந்தப் பணியில் அரசு ஈடுபடுத்துவது அப்பட்டமாகத் தெரிகிறது. மக்களின் சுகாதாரத்தை விட, ஆளுங்கட்சிக்கான ஆதாயமே முக்கியமா என்பதே இந்தத் தொழிலாளர்களின் கேள்வி.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close