ரூ.428 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை! காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் | CM EPS laid foundation stone to new check dam in Kollidam river

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (05/03/2019)

ரூ.428 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை! காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர்

கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே ரூ.428 கோடி மதிப்பீட்டில் 84 மதகுகள், 1072 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க  கூடிய அளவில் கதவணை கட்டுவதற்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

கதவணை

கும்பகோணம் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே ரூ.428 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்ட  முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மழை, வெள்ளக் காலங்களில் காவிரியில் செல்லும் உபரி நீர், கொள்ளிடம் வழியாக வீணாகக் கடலில் கலக்கிறது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கடந்த 4.8.2014 அன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே புதிய கதவணை கட்டப்படும் என அறிவித்தார். இதையடுத்து பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் அங்கு திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும்- நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே 1800 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலத்தில் கதவணை கட்டுவதற்கு ரூ.428 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதே நேரத்தில் அணைக்கரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் வி.செல்வராஜ், செயற்பொறியாளர்கள், மற்றும் பொதுப்பணித்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கட்டப்பட உள்ள புதிய கதவணையில் 84 மதகுகள் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு நான்கு முறை கதவணை நிரம்பி 1.072 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

இந்தக் கதவணை பாலம் வழியாக இருவழிப்பாதை அமைக்கப்பட்டு அதில் நான்கு சக்கர வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படவுள்ளது. மேலும், வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்காலுக்குத் தண்ணீர் விடவும், நரிமுடுக்கு மற்றும் கொண்டப்பன் காவிரி வடிகால் வாய்க்கால் மூலம் மழை, வெள்ளக்காலங்களில் உபரி நீரை கதவணைக்குக் கொண்டு செல்லவும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இந்தப் புதிய கதவணை அமைப்பதன் மூலம் தஞ்சாவூர், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 12,640 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு உறுதியான பாசன வசதி அளிக்க முடியும். மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் கூடுதலாக ஆழ்குழாய் பாசனம் வசதி அளிக்க முடியும். இதனால் அணைக்கரையில் தண்ணீரை கூடுதலாகச் சேமிக்க முடியும் என்பதால் சென்னை நகருக்குப் புதிய வீராணம் திட்டம் மூலம் கூடுதல் நீரை கொண்டு செல்ல முடியும். இந்தப் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் நிறைவடையும் என்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close