`வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் விவரம் தேவை’ - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Madras HC seeks clarification from TN government over special assistance scheme

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (06/03/2019)

கடைசி தொடர்பு:08:00 (06/03/2019)

`வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் விவரம் தேவை’ - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்குத் தடை கோரிய வழக்கில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை ரூ.2000 நிதியுதவி திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், `ஏழை மக்களுக்கச்ரூ.2,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதை எதிர்க்கவில்லை. இதற்காக அரசு மேற்கொள்ளும் நடை முறையை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாக" தெரிவித்தார். 

`முதலில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது ஏழைகளாகக் கருதப்படுபர்களின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ``மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலியானது, சில பகுதிகள் இல்லை எனவும் இந்த அரசாணையை மனுதாரர் எங்கிருந்து பெற்றார் என, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். தற்போது விண்ணப்பங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. யார் யாருக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனப் பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றார்.

அரசு பிறப்பித்த இந்த அரசாணையில் திருத்தம் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அரசாணை யாரிடம் பெறப்பட்டது என்பது குறித்து விளக்க மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகளாகக் கருதப்படுபவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


[X] Close

[X] Close