`புதுக்கோட்டையில் 80 அடி உயர வழுக்கு மரம்!’ - போட்டி போட்டு ஏறிய இளைஞர்கள் | 80 feet tall tree climbing event in puthukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (06/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (06/03/2019)

`புதுக்கோட்டையில் 80 அடி உயர வழுக்கு மரம்!’ - போட்டி போட்டு ஏறிய இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் 80 அடி உயரத்தில் நடப்பட்டிருந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியில், இளைஞர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஏறினர். வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

வழுக்கு மரம்

அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் சிவராத்திரி விழாவையொட்டி, எரிச்சி செவன்ஸ்டார் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதற்காக, சிவன் கோயில் அருகே உள்ள திடலில் சுமார் 89 அடி உயரத்தில் வழுக்கு மரம் நடப்பட்டது. வழுக்கும் வகையில் மரத்தில் கிரீஸ், எண்ணெய் போன்றவை தடவப்பட்டு தயார் நிலையில் இருந்தது. மாலை 4 மணிக்கு போட்டி துவங்கியது. ரூ.15,019 ரொக்கப்பணம், சுழற்கோப்பை, செல்போன், வெள்ளி நாணயம் உள்ளிட்டவை பரிசுகளாக அறிவிக்கப்பட்டன. பனங்குளம் கிங்க்பிஷர் அணியினர், குளத்துக்குடியிருப்பு அணியினர் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட அணிகள் போட்டி போட்டுக்கொண்டு, வழுக்கு மரம் ஏறினர். ஒரு அணிக்கு ஆறு வீரர்கள். இவர்கள் 6 பேரும் ஒருவர் மீது ஒருவர் ஏறி வழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பலூன்களை உடைத்து பண முடிப்பை எடுக்க முயன்றனர்.

மரம் முழுவதும் கிரீஸ், எண்ணெய் போன்றவை தடவப்பட்டிருந்ததால், வழுக்கிக் கொண்டு கீழே விழுந்த வண்ணம் இருந்தனர். ஒவ்வோர் அணிக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போட்டியில் இறுதி வரை முடிவு எட்டப்படவில்லை. உயரம் அதிகமாக இருந்ததால், யாராலும் வெற்றியை தட்டிப் பறிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. கடுமையாகப் போராடிய பனங்குளம் கிங்க்பிஷர் அணியினர் நூலிலையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டனர். இதேபோல், செவிடன்காடு அணியினர் மற்றும் குளத்துக்குடியிருப்பு நண்பர்கள் அணியினரும் கடுமையாகப் போராடினர். இதையடுத்து, ஒவ்வோர் அணியினரும் எட்டிய உயரத்தைப் பொறுத்து முதல் மூன்று அணியினருக்கும் பரிசுகள் மற்றும் ரொக்கப் பணம் பிரித்து வழங்கப்பட்டது. 


[X] Close

[X] Close