``பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்!" - தம்பிதுரை பேட்டி | "Everybody wants Modi to be the next prime minister!" -Thambidurai!

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (06/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (06/03/2019)

``பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்!" - தம்பிதுரை பேட்டி

 
 தம்பிதுரை நிகழ்ச்சி

``தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணியை முறியடிக்க பிரசாரம் மேற்கொள்வோம். அடுத்த பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
 

தம்பிதுரை பேட்டி

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 60 இடங்களில் காலை முதல் மாலை வரை பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, ``தேர்தல் பிரசாரத்துக்காக மோடி தமிழகத்துக்கு வர உள்ள நிலையில், அ.தி.மு.க எதை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி உள்ளது எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணியை முறியடிக்க பிரசாரம் மேற்கொள்வோம். மேலும், அடுத்த பாரதப் பிரதமராக மீண்டும் மோடிதான் வரவேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள்.

அண்ணா வழியில் செயல்படுவதாக கூறும் நீங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தவிர்த்த பா.ஜ.கவோடு கூட்டணி வைக்கும் அ.தி.மு.க முன்னணி தலைவர்களுக்கு பக்குவம் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது எனவும் கேட்கிறீர்கள். 1998 -ல் பா.ஜ.கவோடு ஜெயலலிதா அமைத்த கூட்டணியில் அப்பொழுது பா.ம.கவும் எங்களோடு கூட்டணிக் கட்சியாக இருந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் அரசியல் கூட்டணி என்பது சென்ற தேர்தலில் மட்டும் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். திராவிட முன்னேற்றக் கழகம் கூட பாரதிய ஜனதா கட்சியுடன் 1999-ல் கூட்டணி வைத்தார்கள். 

 தம்பிதுரை நிகழ்ச்சி...

 

தேசியக் கட்சிகளோடு தேசிய கொள்கைகளுக்காகவும், சில திட்டங்களுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் மத்தியில் நிலையான ஆட்சி அமைய தற்போது உள்ள அ.தி.மு.க தலைமை முடிவு எடுத்துள்ளது. மத்தியில் ஏற்படவுள்ள ஆட்சியில் அ.தி.மு.க பங்கேற்கவாய்ப்பு உள்ளது. தற்பொழுது முழுமையாக தமிழர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். தி.மு.கவும், காங்கிரஸும் மத்தியில் ஆட்சியில் இருந்தபொழுது, இலங்கை தமிழர் பிரச்னையில் ராணுவ தளவாடங்களைக் கொடுத்தது. இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறியிருக்கிறார். எனவேதான், அந்தக் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. தமிழகத்துக்குத் துரோகம் செய்தகூட்டணி.

காவிரி நீர் பிரச்னையில் மக்கள் உரிமையை மீட்க முடியாத நிலை இருந்ததன் காரணமாக, நாங்கள் வலிமை இழந்ததாகக் கூற முடியாது. இப்பொழுது அமைத்திருக்கும் கூட்டணியில் தமிழகத்துக்கு ஏதாவது நல்லது கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான், அ.தி.மு.க தலைமை பாரதிய ஜனதாவோடு கூட்டு வைத்துள்ளது” என்றார். 

தேர்தல் வாக்குறுதியாக தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க வெளியிடுமா அல்லது கூட்டணி சார்பில் வெளியிடப்படுமா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ``அதற்கென ஒரு குழு உள்ளது, அவர்கள்தான் அறிவிப்பார்கள். நான் கொள்கை பரப்புச் செயலாளர்தான். கொள்கையை மட்டும்தான் பார்க்க முடியும்" என மழுப்பலாகப் பதிலளித்தார்.

முன்னதாகச் செய்தியாளர்கள், 'இளைஞர்களின் 20 சதவிகித வாக்கு வங்கி தங்கள் பக்கம் இருப்பதாக கரூரில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி இருக்கிறாரே?' எனக் கேட்டதற்கு, பதில் ஏதும் அளிக்காமல் நழுவிச் சென்றார்.


[X] Close

[X] Close